‘ராமாயணம்’ விமர்சனம்

‘ராமாயணம்’ – வால்மீகியின் காவியத்தை பிரம்மாண்ட திரை அனுபவமாக்கிய நிதேஷ் திவாரி.

உலகம் அறிந்த இதிகாசமான ராமாயணத்தை மீண்டும் ஒரு புதிய திரை அனுபவமாக வழங்கியிருக்கிறார் இயக்குநர் நிதேஷ் திவாரி. வால்மீகி எழுதிய மூல ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகத்தில், காவியத்தின் முக்கியமான நிகழ்வுகளைத் தேர்ந்தெடுத்து விறுவிறுப்பான திரைக்கதையாகக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ராவணனின் வம்சப் பின்னணி, அவனது வலிமை மற்றும் ஆளுமை ஆகியவற்றை ஆரம்பத்திலேயே அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது படத்திற்கு வலுவான தொடக்கமாக அமைந்துள்ளது. ராமனின் பிறப்பு, அவரது அறம் சார்ந்த வளர்ப்பு, சீதையுடனான சந்திப்பு, தாடகை வதம், வனவாசம் என முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்ட விதம் சிறப்பு. இறுதியில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லும் நிகழ்வும், ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் இடையே நடைபெறும் போரும் படத்தின் முக்கியமான திருப்பங்களாக அமைந்துள்ளன.

ராமனாக ரன்வீர் கபூர் அமைதியும் கம்பீரமும் கலந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். அறம் மற்றும் கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது. சீதையாக சாய் பல்லவி தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். ராவணனாக யாஷ் தோன்றும் காட்சிகள் தனி கவனம் பெறுகின்றன. குறிப்பாக ராமன் மற்றும் ராவணன் இருவரின் அறிமுகக் காட்சிகளும் ரசிகர்களுக்கு மாஸ் அனுபவத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளன. ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக ராமன் வனவாசம் செல்லும் காட்சியில் அவரது இசை மனதைத் தொடுகிறது. ஒளிப்பதிவு, கணினி வரைகலை மற்றும் 3D தொழில்நுட்பம் ஆகியவை இதிகாச உலகத்தை நம் கண்முன் பிரம்மாண்டமாகக் கொண்டு வருகின்றன.

வால்மீகி ராமாயணத்தின் முக்கிய அம்சங்களைத் திரைக்கதைக்கு ஏற்ற வகையில் சுருக்கியும் விரிவுபடுத்தியும் கையாண்டிருப்பது இயக்குநரின் முயற்சிக்குப் பலம் சேர்க்கிறது. திரையரங்க அனுபவத்தை மனதில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பல காட்சிகள் சிறப்பாகப் பலனளிக்கின்றன. இருப்பினும், சூர்ப்பணகை ராவணனைத் தூண்டும் காட்சிகளுக்கு இன்னும் கூடுதல் அழுத்தம் கொடுத்திருக்கலாம். அதேபோல் ராமன் வனவாசம் செல்ல வேண்டிய சூழலுக்கான உணர்வுப்பூர்வமான காரணங்கள் இன்னும் தெளிவாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டிருக்கலாம்.

கம்பராமாயணத்தின் உணர்வுகளையும் கதை சொல்லும் நுட்பங்களையும் கூடுதலாக இணைத்திருந்தால் சில காட்சிகள் இன்னும் செறிவாக அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.

ராமாயணம் ஏற்கெனவே அறிந்த கதை என்றாலும், அதை மீண்டும் பிரம்மாண்டமான காட்சி மொழியிலும் தொழில்நுட்ப நேர்த்தியிலும் திரையில் கொண்டு வந்திருப்பது படத்தின் முக்கிய வெற்றி. ரன்வீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பு, ஏ.ஆர். ரஹ்மானின் இசை, அசத்தலான ஒளிப்பதிவு மற்றும் காட்சித் தொழில்நுட்பம் எனப் பல அம்சங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன. சில இடங்களில் உணர்வுப்பூர்வமான விளக்கங்கள் குறைந்திருந்தாலும், குடும்பத்துடன் திரையரங்கில் கண்டு ரசிக்கக்கூடிய பிரம்மாண்டமான இதிகாசத் திரைப்படமாக ‘ராமாயணம்’ அமைந்துள்ளது.