தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு போராட்டம் நடத்துவதா.?; ரஜினி கண்டனம்

நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தன்று முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் அதிமுக அரசை கண்டிக்கும் வகையில் சில காட்சிகள் இருந்தமையால் இப்படத்திற்கு பலத்த எதிர்ப்புகள் உருவானது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட சர்கார் திரையிடப்படும் தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை இதனால் உருவானது. எனவே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக் கொண்டது. இது திரையுலகினரின் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியது.

இந்நிலையில் சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை தடுக்க நினைப்பது சரியல்ல என சர்கார் படக்குழுவுக்கு தன் ஆதரவை தெரிவித்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில் சற்றுமுன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் தன் ட்விட்டர் பக்கத்தில் சர்கார் படத்திற்கு ஆதரவாக தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது…

தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.