தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கடிதம்

மாற்றுத்திறனாளிகள் சிரமங்களை தீர்க்க நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் விபரம் வருமாறு,

1.  ரத்து செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை உடன் இணைத்திடுக,

முக்கிய இரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் இரயில்களில் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் கழற்றிவிடப்பட்டுள்ளன. ஏறத்தாழ 8 மாதங்களாகியும் இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் தீர்க்கப்படாமலேயே உள்ளது.  எனவே, பொது மேலாளர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, நிறுத்தப்பட்ட பெட்டிகளை மீண்டும் இணைப்பதுடன் அனைத்து இரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை இணைக்க வலியுறுத்துகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் மற்ற பயணிகளும் இரயில்வே ஊழியர்களும் ஏறி ஆக்கிரமிப்பதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

2. அறிவிக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் இணையதளம் மூலம் சலுகை டிக்கட் பெற்றிட முடியாத நிலை

மாற்றுத்திறனாளிகள் இணையதளம் மூலம் சலுகை கட்டணத்தில் இரயில் டிக்கட் பெற்றுக்கொள்ளலாம் என இரயில்வே நிர்வாகம் இரண்டாண்டுகளுக்கு முன் அறிவித்தது.  இதற்காக மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு ஆவணங்களை எடுத்துக்கொண்டு இரயில்வே அலுவலகங்களுக்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வலியுறுத்தி அலைக்கழித்தது.   அவ்வாறு அலைந்து திரிந்து மனுக்கள் அளித்த நூ ற்று கணக்கானோருக்கு இரயில்வே அடையாள சான்று ஒன்றை பிரத்யேக எண்ணுடன் இரயில்வே நிர்வாகம் வழங்கியது.  தற்போது 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இரயில்வே நிர்வாகம் வழங்கிய அட்டை மற்றும் எண்ணை கொண்டு இணையதளத்தில் சலுகை டிக்கட் பெற முடியாத அவலம் நீக்கிறது.  எனவே, பொது மேலாளர் இப்பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக இந்த வசதியை ஏற்படுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. அரசு மருத்துவர் அளிக்கும்  சான்று இருக்கும்போது இரயில்வே தனியாக தந்துள்ள அடையாள சான்றை வற்புறுத்துவது ஏன்? 

தற்போது தரப்படும் இரயில்வே  அடையாள சான்று இணையதளத்தில் சலுகை டிக்கட் பெற வசதி ஏற்படுத்தி தருவதாகத்தான் இரயில்வே நிர்வாகம் முதலில் சொன்னது.  சில நூறு  பேர் மட்டுமே அலைந்து இந்த சான்றை பெற்றுள்ள நிலையில் பல லட்ச கணக்கான மாற்றுத்திறனாளிகள் இன்னும் இந்த சான்றை பெற முடியாத நிலைமையில் உள்ளனர்.   அவர்கள் இரயில்வே நிர்வாகம் முன்மொழிந்த குறிப்பிட்ட படிவத்தில் இரயில் சலுகை சான்று அரசு மருத்துவர்களிடம் பெற்று நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால், தற்போது தென்னக இரயில்வேயின் பல்வேறு இரயில் நிலைய டிக்கட் கவுண்டர்களில் நடைமுறையில் உள்ள இந்த சான்றை ஏற்க மறுத்து, இணையதளத்தில் சலுகை டிக்கட் பெற என சொல்லி இரயில்வே நிர்வாகம் தந்துள்ள அடையாள அட்டையை கேட்டு வற்புறுத்தி மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கின்றனர்.  

எனவே,இரயில்வே நிர்வாகம்  புதிதாக தருகிற அடையாள சான்றை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கிய பின்னரே, அதை கேட்க வேண்டும் என்பதுடன் அதுவரை நடைமுறையில் உள்ள மருத்துவர்களால் அளிக்கப்படும் சான்றையே ஏற்க உரிய நடவடிக்கைகளையும் உத்தரவுகளையும் பொது மேலாளர் அலுவலகம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். கிடப்பில் போடப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் இந்த முக்கிய கோரிக்கைகளை தென்னக இரயில்வே நிர்வாகம் விரைவில் தீர்க்கவில்லை எனில் மாற்றுத்திறனாளிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க தள்ளப்படுவோம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன்,  டிசம்பர்-3 இயக்கத்தின் மாநில தலைவர் டி.எம்.என். தீபக், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென் பிராந்திய திட்ட இயக்குனர் பி. மனோகரன், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் தலைவர் இ,கே, ஜமால் அலி ஆகியோர் அக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.