புலிமுருகன் – சினிமா விமர்சனம்

புலி முருகன், கடந்த ஆண்டு அக்டோபரில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றதோடு, இதுவரை மலையாளத்தில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை குவித்த படமாகவும் அமைந்தது. முன்பே தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இந்தப் படம் தற்போது தமிழிலும் வெளியாகியிருக்கிறது.

வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமம் புலியூர். காட்டுக்குள் இருந்து இந்த கிராமத்திற்குள் வரும் புலி, மக்களை தாக்கி கொல்கிறது. மோகன்லால் சிறுவயதில் இருக்கும்போது அவரது தந்தையை அந்த புலி கொன்றுவிடுகிறது. ஏற்கெனவே, தாயை இழந்து நிற்கும் மோகன்லால் தனது தந்தையையும் இழந்ததால் ஊர் மக்களிடம் தனது தம்பியை ஒப்படைத்துவிட்டு புலியை கொல்ல காட்டுக்குள் போகிறார். புலியையும் வேட்டையாடி கொன்று விடுகிறார். 

அன்றுமுதல் சாதாரண முருகனாக இருந்த மோகன்லால் புலிமுருகனாக உருவெடுக்கிறார். அதேபோல், காட்டை சுற்றியுள்ள எந்தவொரு கிராமத்திலும் புலியால் ஆபத்து ஏற்பட்டால் மோகன்லால் வேட்டையாடி ஊரை பாதுகாத்து வருகிறார். வளர்ந்து பெரியவனானதும் ஒருநாள் மோகன்லால் தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் காட்டுக்குள் கஞ்சா செடியை பறித்துக் கொண்டு செல்வதற்காக வருகிறார்கள். கேன்சரை குணமாக்கும் மருந்துக்கு அது தேவைப்படுவதாகவும், அதற்கு மோகன்லாலின் உதவி தேவை என்றும் அவரிடம் வருகிறார்கள்.

மோகன்லாலும் அவர்களுக்கு உதவுவதாக கூறிவிட்டு, கஞ்சா செடிகளை பறித்துக் கொடுக்கிறார். கஞ்சா செடிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது போலீஸ் இவர்களை சுற்றி வளைக்கிறது. அவர்களை தாக்கிவிட்டு மோகன்லால் தனது மனைவி கமாலினி முகர்ஜி மற்றும் குடும்பத்துடன் லாரியில் ஏறி தப்பித்து ஜெகபதிபாபுவிடம் அடைக்கலம் தேடிப் போகிறார்கள். ஆரம்பத்தில் ஜெகபதி பாபுவை நல்லவர் என்று நம்புகிறார் மோகன்லால்.

ஜெகபதி பாபுவையும் ஒரு பிரச்சினையில் இருந்து மோகன்லால் காப்பாற்ற, மோகன்லால் மீது ஜெகபதி பாபுவுக்கும் நல்ல மதிப்பு உருவாகிறது. ஒருகட்டத்தில் மோகன்லால் ஜெகபதிபாபுவை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது எதனால்? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்