பொம்மியும் திருக்குறளும்… சுட்டி டிவியில் கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி, முதல் முறையாக திருக்குறளை அனிமேஷன் மற்றும் நிஜ பாத்திரங்கள் வழியே தமிழ் கூறும் நல்லுலகுக்கு எடுத்துச் செல்கிறது.
கஸ்டோ ஸ்டுடியோவின் மாபெரும் தயாரிப்பான இந்த நிகழ்ச்சியை அனிமேஷன் பாத்திரங்களுடன் தொகுத்து வழங்குபவர் இலக்கியத்தரமான நகைச்சுவைக்குச் சொந்தக்காரர், சீரிய தமிழறிஞர் பேராசிரியர் கு ஞானசம்பந்தன்.
தமிழில் இதுவரை யாரும் செய்திராத புதிய முயற்சியாக, உலக மறை திருக்குறளை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கும் இந்த நிகழ்ச்சிக்கு எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைத்துள்ளது?
“மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உண்மையில் நானே எதிர்ப்பார்க்காத வரவேற்பு இது. சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது ஒரு மூன்று வயது சிறுமி என்னிடம் வந்தாள். ‘நீ நல்லா பேசுற… என் தம்பிக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்’ என்றாள். அவள் தம்பிக்கு 2 வயதுதான். அவனையும் அழைத்துவந்தாள். பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சியை அவன் தவறாமல் பார்த்து எனக்கு ரசிகனாகிவிட்டான்.
தமிழகத்தில் பலருக்கும் நான் ஓரளவு பரிச்சயமானவன் என்றாலும், இந்த பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சியில் பார்த்த பிறகு ஏராளமான குழந்தைகள் எனக்கு ரசிகர்களாகிவிட்டார்கள். அண்மையில் ஒரு பள்ளியில் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக யாரை அழைக்கலாம் என விவாதம். அதில் இறுதியில் என் பெயரை முடிவு செய்தார்கள். காரணம், இந்த பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சி என அந்தப் பள்ளிக்குச் சென்ற போது ஆசிரியர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இங்கு மட்டும் அல்ல அயலகத்திலும் மிகப் பிரமாதமான வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த நிகழ்ச்சி,” என்கிறார் பேராசிரியர் கு ஞானசம்பந்தன்.
இந்த நிகழ்ச்சியில் தோன்றியதிலிருந்து தினசரி அவருக்கு ஏராளமான பாராட்டுக் கடிதங்கள், பலதரப்பட்ட பார்வையாளர்களிடமிருந்தும் வருகிறதாம்.
உலகளாவிய பார்வை கொண்ட திருக்குறளுக்கு இந்த நூற்றாண்டில் சுட்டி டிவி செய்யும் தொண்டாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என்பது பொதுவெளியில் பரவி வரும் பரவலான கருத்து.
சுட்டி டிவியில் தினமும் பிற்பகல் 1.30 முதல் 2.00 மற்றும் மாலை 5.30 – 6.00 மணி வரை பொம்மியும் திருக்குறளும் ஒளிபரப்பாகிறது.
இந்த தொடருக்கு திரைத் துறையின் ஜாம்பவான்கள் பலரும் பங்களித்துள்ளனர்.
பொம்மியும் திருக்குறளும் தொழில்நுட்பக் கலைஞர்கள்:
கருத்து வடிவமைப்பு: தோட்டா தரணி
ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ வில்சன்
பாடல்கள்: பா விஜய்
கருத்துருவாக்கம் – கவிதா ஜாபின் சன் நெட்வொர்க் & கஸ்டோ ஸ்டுடியோ
திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்டோ ஸ்டுடியோ
டைட்டில் பாடல் இசை: டிமோதி மதுகர்