ஏவுகணை நாயகனும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் பேக்கரும்பு சென்ற பிரதமர் மணிமண்டபம் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முதலில் தேசிய கொடிய ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மோடி அதை தொடர்ந்து மணிமண்டபத்தை திறந்து வைத்தார். மணிமண்டபத்தின் உள்ளே அப்துல் கலாம் வீணையோடு அமர்ந்திருக்கும் திருவுருவ சிலையையும் மோடி திறந்து வைத்து. கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி மணிமண்டபத்தை சுற்றி பார்வையிட்டார்.
மேலும் அப்துல்கலாம் கண்காட்சி பேருந்து பயணத்தையும் மோடி துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள், முக்கிய விருந்தினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.