நாதுலா எல்லை பகுதிக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வட கிழக்கு மாநிலமான சிக்கிமில், இந்தியா – சீனா எல்லையில் உள்ள, டோக்லாம் பகுதி, சர்ச்சைக்குரியதாக உள்ளது. இதன் அருகில், சாலை அமைக்கும் பணிகளை சீனா செயல்படுத்தியதால், சர்ச்சை எழுந்தது. மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அங்கு சாலை அமைக்கும் பணியை, சீனா நிறுத்தியது.
இந்நிலையில், சிக்கிமில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன், எல்லை அருகே, சீன பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன வீரர்களுடன், கலந்துரையாடினார். சீன வீரர்களுக்கு, ‘நமஸ்தே’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அவர் கற்றுக் கொடுத்தார். அமைச்சரின் இந்த தன்மை சீனாவை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அமைதியை மேம்படுத்த விரும்புவதாக சீனா அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:எல்லையில் சீன ராணுவத்தினரை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியது சிறப்பான நிகழ்வு. சீனா-இங்கிலாந்து இடையே 1890ம் ஆண்டு போடப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் மூலம் இந்திய-சீன எல்லையில் அமைந்துள்ள சிக்கிம் பகுதி பிரிக்கப்பட்டது. அதுதொடர்பான உடன்படிக்கையை இந்தியா ஏற்பது அவசியம். இந்த உண்மைக்கு மிகச்சிறந்த சாட்சி நாதுலா பகுதி.
இரு நாடுகளுக்கிடையே ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், உடன்படிக்கையின்படி, இந்தியாவுடன் இணைந்து அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.