மக்கள் மனதை கவர்ந்த மாயழகு காவலரின் அடுத்த அதிரடி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பேசி மனதை கவர்ந்த காவலர் மாயழகு, அடுத்தபடியாக தனது அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, கடந்த 25-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது, அனைவருக்கும் வணக்கம்!, என்னை தொடர்புப்படுத்தி வெளியாகும் வதந்திகளுக்கும் பொய்யான தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன். தற்போது நான் என் வீட்டில் இருந்தபடி இந்த வீடியோவை பதிவு செய்துள்ளேன். நான் மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின்போது நான் பேசியது தொடர்பாக என் மீது துறைரீதியாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. நாளை பணிக்கு வருமாறு எனக்கு அழைப்பு வந்துள்ளது. எனக்கு போலீஸ் வேலை போய்விட்டால் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை தருவதாக முன்னர் சிலர் தெரிவித்திருந்தனர். அந்த வேலை இனி எனக்கு தேவை இல்லை. ஏனென்றால்.., எனக்கு போலீஸ் வேலைதான் முக்கியம். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளை தாக்கி வீர மரணம் அடைந்த எனது சக காவலர் சங்கர் என்பவரின் மனைவிக்கு அந்த வேலையை தந்து உதவினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை, அந்த (தனியார் நிறுவனங்கள் வேலை அளிக்க தயாராக இருப்பதாக வந்த) தகவல்கள் பொய்யானதாக இருக்குமானால், மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், இறந்த காவலர் சங்கரின் குடும்பத்துக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் நிதியை மட்டும் தராமல், அவரது மனைவிக்கு ஒரு அரசு வேலையை தந்து ஆதரவற்று நிற்கும் அவரது குழந்தைகளின் கஷ்டத்தை போக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் மிக அதிகமாக ‘ஷேர்’ செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு விரைவில் இது போய்சேரும். இதன் மூலமாக, தனது கணவரை இழந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் அந்த காவலரின் மனைவிக்கும், அந்த குழந்தைகளுக்கும் மிக விரைவில் உதவி கிடைக்கும். எனவே, தயவுசெய்து இந்த வீடியோவை அதிகமாக ‘ஷேர்’ செய்யுங்கள். இவ்வாறு அவர் தனது வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.