சட்டசபையில் இன்று தி.மு.க. வெளிநடப்பு

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். அப்போது, கடந்த 23-ஆம் தேதி அமைதியான முறையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். நடுகுப்பத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு தீ வைப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. அன்றைய தினம் நடந்த சம்பவங்களுக்கு முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி பேசும்போது, “குடியரசு தின விழாவுக்கு தனக்கும், காங்கிரஸ் எம்.எல்ஏ.க்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை?” என்றார். அவருக்கு ஆதராக தி.மு.க. உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் தனபால், “இதுபற்றி விசாரித்து விளக்கம் அளிக்கப்படும்” என்றார். இதையடுத்து ஜல்லிக்கட்டு போராட்டம் பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். உடனே மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச முயன்றார். அவர் கூறிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். மு.க.ஸ்டாலின் பேச அனுமதிக்குமாறு குரல் கொடுத்தனர். இதையடுத்து மு.க. ஸ்டாலின் பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்த சம்பவங்கள் குறித்து முதல்-அமைச்சர் விளக்கம் அளித்தார். இந்த சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கை குறித்து பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். அதற்கு முதல்வர் உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு முதல்-அமைச்சர் உடனே பதில் அளிக்கவில்லை என்று கூறி தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  வெளிநடப்பு செய்த பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி அமைதியாகவும் அறவழியிலும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தினார்கள். 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டத்தையும் நினைவூட்டுவதாக அது இருந்தது. கடந்த 17-ஆம் தேதி இந்த போராட்டம் தொடங்கியது. அதற்கு வெற்றியும் கிடைத்தது. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதற்காக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு போன்றவை நடந்திருக்கிறது. சென்னை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் மாணவர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நடந்ததற்கு காரணம் போராட்டக்காரர்களுடன் சமூக விரோத சக்திகள் புகுந்தது தான் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் விளக்கம் அளித்தார். என்றாலும் இதற்கான காரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஆளுனரிடம் நேரடியாக மனு அளித்திருக்கிறோம். பிரதமருக்கும், உள்துறைக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம். சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தின் போது மாணவர்கள் மீது நடந்த தாக்குதல், வன்முறை சம்வங்கள் குறித்து உயர்நீதி மன்றத்தில் பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் முதல்-அமைச்சர் பதில் அளிக்கவில்லை. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.