நாடுமுழுவதும் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவிற்கு பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அந்த கூட்டமைப்பு சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்தால் டீலர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படும். இந்த திட்டம் பரீட்சார்த்தமாக அமல்படுத்த ப்பட்டுள்ள 5 நகரங்களில் டீலர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கையை சுட்டுக்கொண்ட மாதிரி அவர்கள் அவஸ்தைக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் திடீரென 16ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர். அது எங்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த முடிவை ஏற்க இயலாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்து, டீலர்கள் நஷ்டம் அடையாதபடி ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அத்தகைய ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் 16ஆம் தேதி முதல் தினமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டால் அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.
இதையும் மீறி எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டால், அது பெட்ரோல் விற்பனை டீலர்களை இருளில் தள்ளி விடும். எனவே பெட்ரோல் நிலையங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், 16ஆம் தேதி நாங்கள் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய மாட்டோம். எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் பெட்ரோலிய பொருட்களை வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.