தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு அளித்த ஆதரவை இரு அணிகள் இணைப்பிற்கு பிறகு வாபஸ் பெற்றனர். மேலும், இது குறித்து ஆளுநரிடம் மனுவையும் அளித்திருந்தனர். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் ஆளுநர் எடுக்கவில்லை. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு 111 எம்.எல்.ஏக்கள் வருகை தந்திருந்தனர். இதில், இரண்டு எம்.எல்.ஏக்கள் வர இயலவில்லை என்றாலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். டிடிவி முகாமில் உள்ள 9 எம்.எல்.ஏக்கள் தொடர்பு கொண்டு ஆதரவு அளிப்போம் என கூறினர். அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களும் முதல்வரின் நடவடிக்கையை ஆதரிப்பதாக கூறியுள்ளனர். துரோகம் செய்யும் எம்.எல்.ஏக்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். அவர்களை ஜெயலலிதா ஆத்மா தண்டிக்கும். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கலாம் என நினைப்பவர்களின் எண்ணத்தில் மண் தான் விழும்” என்று கூறினார்.