பிரிக்ஸ் மாநாட்டில், பாகிஸ்தானின் பயங்கரவாத செயலுக்கு கண்டனம்

சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். முதல் நாளான நேற்று, பிரிக்ஸ் அமைப்பு நாடுகளில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து பேசப்பட்டது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பிரிக்ஸ் பிரகடனத்தில், “தீவிரவாதத்திற்கு எதிராக ஆப்கான் ராணுவம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். மேலும், மாகாண பாதுகாப்பு குறித்து பிரிக்ஸ் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. தலிபான், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மது, உஸ்பேகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய இயக்கம், அல் – கொய்தா மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் போன்றவை அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் முறையாக பிரிக்ஸ் மாநாட்டில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் நட்பு நாடாக விளங்கும் சீனா, பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்கு பெரும்பாலும் மறுப்பு தெரிவித்து வந்தது. மேலும், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முஹம்மதுவின் தலைவன் மவுலானா மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா-வில் அறிவிக்க இந்தியா மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கும் சீனா தடையாக இருந்து வந்ததது. 

இந்த சூழ்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில், பாகிஸ்தான் தீவிரவாதத்தின் புகலிடமாக விளங்குகிறது என்பதை மறைமுகமாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது இந்திய தரப்புக்கு ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபருடன் பிரதமர் மோடி தற்போது இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பில் டோக்லாம் விவகாரம், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவது, அணுசக்தி உறுப்பு நாடு போன்ற மிக முக்கிய பிரச்னைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசுவார்கள் என தெரிகிறது.