“சம்படி” ஆட்டத்தை கொண்டாடும் பரியேறும் பெருமாள்

ஆட்டம், பாட்டம் என கலைகளின் கொண்டாட்டங்களால் நிறைந்தது, தமிழர் வாழ்க்கை. அதிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலைகள் உள்ளன. அவை திரைப்படங்களில் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால்… வெகு சில படங்களைத் தவிர முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற “சம்படி” ஆட்டத்தை கொண்டாடுகிறது, பரியேறும் பெருமாள். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள “பரியேறும் பெருமாள்” திரைப்படம் லைக்கா நிறுவன வெளியீடாக வரவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல், “கருப்பி என் கருப்பி” பிப்ரவரி மாதம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போது பரியேறும் பெருமாள் படத்தின் இரண்டாவது பாடல் “எங்கும் புகழ் துவங்க…” வெளியாகியுள்ளது.
அசல் கிராமத்தையும் கிராமத் திருவிழாவையும் கண்முன்னே நிறுத்தும் இந்தப்பாடலில் 90களில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற சம்படி ஆட்டக்கலைஞராக கலக்கிய அந்தோணி தாசன் மற்றும் இன்று கொண்டாடப்படும் சம்படி ஆட்டக்கலைஞரான கல்லூர் மாரியப்பன் இருவரின் பாடலுடன் கதைநாயகன் கதிர், கதைநாயகி ஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போடும் ஆட்டமும் அப்படியே ஒரு கிராமத்து விழாவில் கூட்டத்திற்கு மத்தியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. சான்டி நடனம் அமைத்திருக்கும் இப்பாடலை எழுதி இருப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
‘சம்படி’ ஆட்டத்தை ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற இயக்குநர் மாரி செல்வராஜின் ஆசையை மிக சிறப்பாக நிறைவேற்றி வைத்திருக்கிறாரார்களாம், இசையைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித். 
முதல்முறை கேட்கும்போதே அனைவரையும் தலையாட்ட வைக்கும் இந்தப்பாடல் படத்தில் பார்க்கும் நிச்சயம் வேறு ஒரு அனுபவத்தை தரும்.