தமிழகத்தில் இன்று பிளஸ் 2 ஆங்கிலம் முதல்தான் தேர்வு நடைபெற்றது. இதில் மேட்டூர் அருகே சாலை விபத்தில் பெற்றோர்களை பறிகொடுத்த மாணவி ஒருவர் சோகத்துடன் கண்ணீர் மல்க தேர்வு எழுதினார். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவே தேர்வு எழுதியதாக கூறியுள்ளார். முருகேசன் தம்பதியின் மகள் அமிர்தவர்சினி, ப்ளஸ் டூ படித்து வருகிறார். இவர் பொறியியல் படிக்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. நேற்று மாலை தனது மனைவி சுமதியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் முருகேசன். அப்போது கார் ஒன்று முருகேசன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். பெற்றோரை பறிகொடுத்த நிலையிலும் மாணவி அமிர்தவர்சினி கண்ணீர் மல்க தேர்வு அறைக்கு வந்து தேர்வு எழுதினார். சக மாணவிகள் அவருக்கு ஆறுதல் கூறினர். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவே தேர்வு எழுதியதாக மாணவி கூறியுள்ளார்.
அதேபோல தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வுகளை எழுதி வருகிறார் மாணவி மோனிஷா. சேலம் அய்யந்திருமாளிகை ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்தவர் வெங்கடேசன் மனைவி சுதா, 43. பெண்கள் கிளை சிறையில் வார்டனாக பணிபுரிந்த அவர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மகள் மோனிஷா சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். வியாழக்கிழமையன்று தமிழ் முதல் தாள் தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய நிலையில் மருத்துவமனையில் இருந்த தாய் சுதா உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் வியாழக்கிழமை மாலை நடப்பதாக இருந்தது. ஆனால் அம்மா ஆசைப்படி பிளஸ் 2 தேர்வெழுதி அதிக மதிப்பெண் பெற்றாக வேண்டும் என மாணவி மோனிஷா பிடிவாதமாக இருந்தார். வெள்ளிக்கிழமையன்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வெழுத மையத்துக்கு வந்தார்.
தாய் இறந்த மறுநாள் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் சக மாணவியர் இடையே உருக்கத்தை ஏற்படுத்தியது. தேர்வு முடிந்த பின்னர் இறுதிச்சடங்கில் மோனிஷா பங்கேற்றார். இன்று ஆங்கிலம் முதல்தாள் தேர்வு எழுதியுள்ளார் மாணவி மோனிஷா. பெற்றோர்களின் மரணத்திற்குப் பின்னரும் மாணவிகள் மனம் தளராமல் தேர்வு எழுதி பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.