24 மணி நேரத்தில் இரண்டு முறை தாக்குதல், மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்துகிறது. அவ்வகையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 24 மணி நேரத்தில் இரண்டு முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று கிருஷ்ணகாட்டி செக்டாரில் மோர்ட்டார் ரக குண்டுகள் வீசியும், துப்பாக்கியால்சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்த பதற்றமான சூழ்நிலையில், இன்று காலை 6.40 மணியளவில் பூஞ்ச் செக்டாரில் மோர்ட்டார் ரக குண்டுகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளால் தாக்கியனர். இதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. தொடர்ந்து பூஞ்ச் செக்டாரில் சண்டை நடந்து வருவதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 9ஆம் தேதி பூஞ்ச் எல்லையில் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் தீபக் ஜெகன்னாத் காட்கே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் தொடர் அத்துமீறலுக்கு மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எப்போதெல்லாம் பண்டிகை வருகிறதோ அப்போதெல்லாம் தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானின் பழைய பழக்கம் என்றும் அவர் சாடியுள்ளார்.