நவீன பெண்களின் பிரச்னைகளை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ‘படிக்காத பக்கங்கள்’ – கவிப்பேரரசு வைரமுத்து

முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத பக்கங்கள்’ இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த மேடைக்கு ஆதவ் பாலஜி என்று ஒரு கலைஞர் பேச வந்தார். அறிவிப்பாளர், அவர் பெயரைத் தடம் மாற்றி ஆதங்க பாலாஜி என்று அறிவித்தார். ஆதவ் பாலாஜி என்பது அவரது இயற்பெயர். ஆனால், திரையுலகத்தின் தற்கால நிலைமை என்ன, கதைகளின் போக்கு என்ன, திரையரங்குகளின் நிலைமை என்ன, தயாரிப்பாளர்களின் கலவரம் என்ன என்று ஆதங்கத்தைக் கொட்டி விட்டுப் போனதால் அவருக்கு ஆதங்க பாலாஜி என்று காரணப் பெயராக அமைந்து விட்டது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதுதான் உண்மை.

இந்த விழாவிற்கு நான் மகிழ்ச்சியோட வந்திருக்கிறேன். காரணம் என்ன தெரியுமா தோழர்களே? வெற்றி பெற்ற பெருமக்களை வாழ்த்தச் செல்வது இயல்பு. நாம் சென்று வாழ்த்தாமலே அவர்கள் வெற்றி பெறுவார்கள். நம்முடைய வாழ்த்துரை ஒன்றும் அவர்களுக்குத் தனியாகக் கிரீடம் ஆகிவிடுவதில்லை. ஆனால் யாரை வாழ்த்த வேண்டும்? வளரக்கூடிய கலைஞர்களை வாழ்த்த வேண்டும்; ஆதரவற்ற கலைஞர்களை வாழ்த்த வேண்டும்; சாதிக்கத் துடிக்கிற கலைஞர்களை வாழ்த்த வேண்டும்; பழையன கழிய புதியன புகுகிற போது புதிய முகங்களை புதிய ஆற்றல்களை வரவேற்று வாழ்த்த வேண்டும். ஏனென்றால் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு என்று பார்ப்பவன் பழைய கால மனிதன், எந்தப் பூவில் எந்தத் தேனோ என்று பார்ப்பவன் புதிய காலத்து மனிதன். இந்த மலர்களில் எந்தப் பூவில் எந்தத் தேன் என்று யார் அறிவார்? அதனால் இவர்களை வாழ்த்த வந்திருக்கிறேன்.

திரையுலகம் சிதைந்து போனதற்கு காரணம் பார்வையாளன் அல்ல நடிகர்கள் அல்ல, கதையாசிரியர் அல்ல,தி ரையரங்க உரிமையாளர் அல்ல; திரையுலகம் இன்று நிறம் மாறி போனதற்கும் தடம் மாறி போனதற்கும், ஒரு படம் வெளியாகிற அன்று முன் வரிசையில் 12 பேர் மட்டுமே அமர்ந்திருப்பதும், வெளியே நுழைவுச்சீட்டை வழங்க யாருக்கும் தெரியாமல் ஒரு ஆளை நியமிக்கிறார்கள். அந்தப் பதிவுச் சீட்டு வழங்கும் நபர் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார். வெளியே இருந்து அவருக்கு ஒரு செய்தி வரவேண்டும். என்ன செய்தி என்றால், வெளியே வரிசையில் குறைந்தபட்சம் 15 பேர் இருந்தால் மட்டும் இந்தச் சீட்டைக் கொடு இல்லையென்றால் இந்தக் காட்சியை ரத்து செய்துவிடு என்று அவர்களுக்குள் ஒரு தீர்மானம் உருவாகிறது. இந்த 15 பேர் இருந்தால் அவர்களுக்கு மின்சாரச் செலவு கட்டுப்படியாகும். இல்லையென்றால் மின்சாரக் கட்டணம் நஷ்ட்டத்தில் அந்தத் திரையரங்கம் நடக்கத் தொடங்கும் அந்தக் கட்டணத்தை தவிர்க்கத்தான் அனுமதிச் சீட்டு கொடுக்கவே தயங்குகிறார்கள். இதற்குக் காரணம் யார்? நல்ல படங்களைப் பார்க்க ஆட்கள் வராமல் இருக்க தயங்குவதற்கு என்ன காரணம்? இன்றைய தொழில்நுட்பக் காலம்தான் அதற்குக் காரணம்.

தொழில்நுட்பக் காலம் மனிதர்களைத் தமிழ் சினிமா ரசிகர்களைத் துண்டாடி விட்டது. கைத் தொலைபேசியில் ஒரு கூட்டம் கணிப்பொறியில் ஒரு கூட்டம், ஹோம் தியேட்டரில் ஒரு கூட்டம், திரையரங்கில் ஒரு கூட்டம், ஒடிடி-யில் ஒரு கூட்டம் என மொத்தமுள்ள 35 லட்ச ரசிகர்களை 35 பிரிவுகள் துண்டாடிவிட்டன. இந்த 35 பிரிவுகளிலும் கரங்களை நுழைப்பவன்தான் வெற்றி பெற முடியும். இதனால்தான் தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

திரையுலகில் இது எனக்கு 44 ஆவது ஆண்டு. இந்த 44 ஆவது ஆண்டில் எனக்குப் பிடித்த சில பாடல்களில் ஒன்றாக, இந்தப் படிக்காத பக்கங்களில் எழுதியுள்ள ‘சரக்கு’ என்ற பாடலும் இடம்பெறும். இதுதான் நான் இயங்குவதற்கான காரணம். முத்துகுமார் எனக்குச் சுதந்திரத்தைத் தந்திருந்தார். அந்தச் சுதந்திரத்தை, இந்தியா அடைந்த சுதந்திரம் மாதிரி தவறாகக் கையாளவில்லை. சரியாகவே கையாண்டிருக்கிறேன். அதனால்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன். என்னுடைய முன்னோடிகள் மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, கவி கே.பி.காமாட்சி சுந்தரம் என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இத்தனைப் பெருமக்களும் தமிழ் பாடலில் ஒரு கருத்தைச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். படத்தோட நடிகர்கள், இயக்குநர்கள் என எல்லோரையும் மறந்து விடுகிறார்கள். ஆனால், பாட்டும் இசையும் இசையமப்பாளரும், பாட்டை எழுதியவரும் நிலைத்து நிற்கிறார்கள். பாட்டு வரிகளால், இசையால், ஒரு சமூகம் நினைக்கப்படும்.

நவீன பெண்களின் பிரச்னைகளை மைய்யப்படுத்தி, ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கட்டாயம் படத்தைப் பாருங்கள். இதுவரை மதுவைக் கொண்டாடித்தான் பாட்டு இருந்திருக்கிறது. இந்தப் படத்தில் நான் எழுதி இருக்கும் பாட்டு முழுக்க முழுக்க மதுக்குடிக்கு விரோதனமான பாட்டு.

மதுவின் கொடுமை தெரியுமா உங்களுக்கு? ஒரு மணி நேரத்தில் 18 மதுச்சாவுகள் முடிந்திருக்கும். இந்த நிகழ்சி நடந்து முடியும் 2 மணி நேரத்தில் 32 மதுச்சாவுகள் நடந்து முடிந்திருக்கும். நான் 10 வயதில் இருந்து மதுவுக்கும் போதைக்கும் எதிரானவன். மதுவால் போதையால் எங்கள் ஊர், உறவுகள் எவ்வளவு பாதிப்புக்குள்ளானது என்பதை நான் அறிவேன். இது வரை ஒரு சொட்டு மது கூட நான் குடலில் இறக்கியதில்லை. மதுவை விட மோசமானது புகை. ஆகையால் இந்தப் பாடலை வைத்ததற்காகத் தமிழ்ச்சமூகம், இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறது.

ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது இசை. இரண்டும் கூடினால்தான் அதற்குப் பாட்டு என்று பொருள். சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், சில நேரங்களில், மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. இதைப் புரிந்து கொள்ளாதவன் அந்ஞானி.

பாட்டுக்குப் பெயர் வைப்பது யார், பெயர் சூட்டப்படும் போதுதான் பொருள் உரிமையாகிறது. பெயர்தான் பட்டா, பெயர்தான் பத்திரம், பெயர்தான் ஆதாரம், பெயர் ஆதாரில் இருந்தால்தான் இந்தியாவில் நீ!

பாட்டுக்குப் பெயர் வைப்பது இசையா, மொழியா? பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான். அதற்கு அழகு செய்தது இசை, அபிநயம் செய்தது இசை, அதை மறுக்க முடியாது. இசையும் மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தை வெற்றிபெற வைக்க வேண்டும்” என்றார்.