மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்

அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணியின் கழக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்வது தொடர்கதையாகி வருகிறது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்கு சொந்தமான படகில் ஆரோக்கியதாசுடன், முத்துப்பாண்டி, ஜெசுராஜா, வழிவிட்டான், நாகூரான் உள்ளிட்ட 5 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி, வலைகளை அறுத்தெறிந்து, படகுடன் 5 பேரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

நடுக்கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை தாக்குவதும், அவர்களின் வாழ்வாதாரமான வலைகளை அறுத்தெறிந்து படகுகளை சேதப்படுத்தவதும், தமிழக மீனவர்களை சிறைப்பிடித்து செல்வதும் இலங்கை கடற்படையினருக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து, 10 நாட்களான நிலையில், இதுவரை
65 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

இதனால், தமிழக கடலோர மாவட்ட மீனவ கிராமங்களில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தொலைநோக்கு பார்வையோடு தமிழக மீனவ மக்களின் வாழ்வாதாராத்தை மேம்படுத்துவதற்காக எண்ணற்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தினார்கள். மேலும், தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து, மத்திய அரசை பலமுறை வலியுறுத்தி, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்கள்.

அம்மா அவர்களின் வழியில், நானும் முதலமைச்சராக இருந்தபோது, தமிழக மீனவர்கள் நலனை காத்திட மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன். மத்திய அரசு, இலங்கை அரசினை வலியுறுத்தி, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொண்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.