எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுகவின் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று இபிஎஸ் அணிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்து, ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் அளித்தனர். இந்நிலையில், ஸ்டாலின் தற்போதுள்ள அமைச்சரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஆளுநருக்கு இது தொடர்பாக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இபிஎஸ் அணிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றதால், இபிஎஸ் தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை இழக்கும் நிலை உள்ளது. அதிமுகவின் மொத்தமுள்ள 135 பேரில், 19 பேர் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றதால் தற்போது இபிஎஸ் அணியின் ஆதரவு நபர்களின் எண்ணிக்கை 116 ஆக குறைந்துள்ளது. எனவே பேரவையில் தன் அமைச்சரவையின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும். இதற்காக சட்டப்பேரவை உடனடியாக கூட்டப்பட வேண்டும்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.