நேற்று நடைபெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை விரைவில் கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. தற்போது அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அடுத்த மாதம் இந்த இரண்டு கூட்டங்களும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழக விதி 19, பிரிவு 7இன் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் படி அடுத்த மாதம் 12-ஆம் தேதி சென்னை வானகரத்தில் ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் வைத்து கூட்டமானது நடைபெற உள்ளது. இதற்கு கழக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமைத் தங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அம்மா மற்றும் அதிமுக புரட்சி தலைவி அம்மா ஆகிய இரு அணிகள் சார்பிலும் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலா, தினகரன் தொடர்பான முக்கிய முடிவுகள் ஏதெனும் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.