ZEE5 தமிழ் தனது அடுத்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘நூறு சாமி’யை அறிவித்துள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் ZEE5 தளத்தில் OTT பிரீமியராக வெளியாகவுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான ‘பரிமளா & கோ’ திரைப்படம் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக ‘நூறு சாமி’ திரைப்படம் வெளியாகிறது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘நூறு சாமி’, தனது மகன் மற்றும் குடும்பத்திற்காக பல ஆண்டுகள் வாழ்க்கையை தியாகம் செய்த ஒரு விதவை தாயின் கதையை மையமாகக் கொண்டுள்ளது. தனது 40-களின் நடுப்பகுதியில் மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கைத்துணையைத் தேடும் அந்தத் தாய், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் எதிர்ப்பை எதிர்கொள்கிறார்.
தனது தாயின் தியாகங்களையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளும் மகன், சமூகத்தின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தாயின் மகிழ்ச்சியைத் தேர்வு செய்ய அவருக்கு ஆதரவாக நிற்கிறார். தாய்–மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், திருமணம், தாய்மை, தியாகம் மற்றும் பெண்கள் மீதான சமூக எதிர்பார்ப்புகள் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசுகிறது.
திரையரங்குகளில் வெளியான இப்படம், ஆரம்பத்தில் சுமாரான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் வாய்மொழி பாராட்டுகளால் அடுத்தடுத்த வாரங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ZEE5 தென்னிந்திய மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் மற்றும் தமிழ் & மலையாள வணிகத் தலைவர் லாயிட் சி. சேவியர் கூறுகையில், “இன்றைய பார்வையாளர்கள் பொழுதுபோக்குடன் சமூகத்தில் உருவாகும் மாற்றங்களை பிரதிபலிக்கும் சிந்திக்க வைக்கும் கதைகளையும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில், ஆழமான பிராந்திய பின்னணியுடன் முன்னோக்கிய சிந்தனையை இணைக்கும் ‘நூறு சாமி’ திரைப்படம் குடும்ப பார்வையாளர்களை நிச்சயம் கவரும்” என தெரிவித்தார்.
‘நூறு சாமி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த ஆகஸ்ட் மாதம் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.


