K Square Cinemas தயாரிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. டி. இமான் இசையமைத்துள்ள இப்படம் “Inspired from True Incidents” என்ற அடைமொழியுடன் கிரைம் இன்வஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ளது.
முகன், நிதின் சத்யா, தான்யா ஹோப், பிந்து மாதவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்ய, வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
விழாவில் பேசிய இசையமைப்பாளர் டி. இமான், இயக்குநர் பலராம் கிருஷ்ணா தனது முதல் படத்திலேயே சிறப்பான பார்வையுடன் பணியாற்றியுள்ளதாகவும், படக்குழுவினரின் உழைப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் பலராம் கிருஷ்ணா பேசுகையில், மனிதர்களின் மனநிலையும் குணமும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதை மையமாகக் கொண்டு ‘நிறம்’ உருவாகியுள்ளதாக தெரிவித்தார். நாயகன் முகனும் படக்குழுவினரின் உழைப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், ரசிகர்கள் திரையரங்கில் படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
‘நிறம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


