மொபைல் எண் இணைப்பு பெற ஆதார் கட்டாயம்

பழைய வாடிக்கையாளர்கள் மொபைல் எண் சேவையை தொடர்ந்து பெறவு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இனி தொலைபேசி சேவை வழங்குநர்கள் ஆதார் சார்ந்த கேஒய்சியை(வாடிக்கையாளரின் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விவரங்கள்) தங்கள் வாடிக்கையாளர்களிடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தொலைதொடர்பு துறை சார்பில் அனைத்து தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை வெளிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, ஆதார் இணைக்கப்பட்ட இ-கேஒய்சி மூலம் மொபைல் பயன்பாட்டாளர்களின் தகவல்களை சேகரிக்கும் அரசின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பினால் நாட்டின் 100 கோடிக்கும் மேற்பட்ட மொபைல் பயனாளிகளிடம் ஆதார் விவரங்கள் பெறப்படும் என்று கூறப்படுகிறது. இதைச் செயல்படுத்தத் தேவைப்படும் ரூ.2,500 கோடியை, சேவை வழங்கும் நிறுவனங்கள் ஏற்கும்.

ஆதாரை அடிப்படையாகக் கொண்ட இ-கேஒய்சி செயல்பாடுகள், பிப்ரவரி 6, 2018-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையை மட்டுமே பெறுவதற்காக மட்டுமே வாங்கப்பட்ட மொபைல் இணைப்புகள், மாற்று எண்கள் மூலம் சரிபார்க்கப்படும். பான் கார்டு பயன்பாட்டுக்கு ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்புக்குப் பிறகு, தொலைதொடர்புத் துறை இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.