ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு செய்யும்போது போது, தேர்தலை நடத்தும் அதிகாரியிடம் சம்பந்தப்பட்ட வேட்பாளர் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும். அது தொடர்பான பத்திரத்தின் 2-வது பக்கத்தில் வேட்பாளர் தனது பெயரை குறிப்பிட்டு தனது சொந்தங்கள் பற்றிய தகவலையும் தெரிவித்து சத்தியப்பிரமாணம் செய்து உறுதி அளிக்கிறேன் என்றும் தெரிவிப்பார்.
அதன்படி அந்த பத்திரத்தின் ‘பகுதி ஏ’வில் தீபா அளித்துள்ள விவரங்களில் தியாகராய நகர் சிவஞானம் ரோட்டில் வசித்து வருவதாகவும், தனது தந்தையின் பெயர் ஜெ.ஜெயகுமார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜெ.தீபா எனும் நான் சத்தியப்பிரமாணம் செய்து கீழ்க்கண்டவற்றை உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அதே பக்கத்தில் தீபா தன்னை சுயேட்சை வேட்பாளர் என்று குறிப்பிட்டு, தனது தொலைபேசி மற்றும் செல்போன் எண்களை குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது இ-மெயில் முகவரிகளும், வாட்ஸ்-அப் வசதி கொண்ட செல்போன் எண்ணும் இடம் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து வேட்பாளர் மற்றும் அவரது துணைவியர், துணைவர் பற்றிய தகவல்கள் அவர்களின் நிரந்தர வங்கி கணக்கு எண், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நிலை பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதில் விண்ணப்பதாரர் துணைவர் பகுதியில், தீபாவின் கணவர் மாதவனின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த காலத்தில் மாதவனின் பெயரை தீபா குறிப்பிடாமல் விட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவல் வாட்ஸ்-அப், உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் தீயாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.