பாளையங்கோட்டையில் பிரபல நகைக்கடையில் ரூ.20 கோடி கொள்ளை

பாளையங்கோட்டை மகாராஜாநகரை சேர்ந்தவர் பாபு. இவருக்கு சொந்தமான அழகர் ஜூவல்லர்ஸ் நகை கடை தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு கோவில்பட்டி, பாளை முருகன்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன.  3 தளங்களில் அழகர் ஜூவல்லர்ஸ் அமைந்துள்ளது. இங்கு தங்க, வைர, வெள்ளி நகைகள் விற்பனைக்கு உள்ளன. நேற்று இரவு மணியளவில் வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை அடைத்தனர். நம்பி, சுந்தரம் ஆகிய 2 இரவு காவலர்கள் பணியில் இருந்தனர்.   

காலையில் கடை உரிமையாளர் பாபு மற்றும் ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது நகைக்கடையின் கதவுகள் உடைக்கப்பட்டிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையின் உள்ளே சென்று பார்த்த போது 3 தளங்களில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மாநகர துணை கமிஷனர் பிரதீப் குமார், கூடுதல் துணை கமிஷனர் இளங்கோ, குற்றப்பரிவு உதவி கமிஷனர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் நகைக்கடையின் மாடி வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தது தெரியவந்தது. நகைகடையின் அருகில் புதிய கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அதில் கட்டப்பட்டுள்ள கம்புகள் வழியாக ஏறி நகைக்கடையின் மாடியை அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்பு கதவை கியாஸ் வெல்டிங் மூலம் துளையிட்டுள்ளனர். பின்னர் அந்த துளை வழியாக கடையின் 3-வது தளத்திற்கு   வந்துள்ளனர். பின்னர் ஷட்டரை உடைத்து கடையினுள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளி சாக்குமூட்டையில் கட்டியுள்ளனர். இவ்வாறு மற்ற 2 தளங்களிலும் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்துவிட்டு  அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்க-வைர நகைகளின் மொத்த மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.