இந்தியாவில் ஸ்மார்ட்போன் செயலிகளின் பயன்பாடு கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 43% அதிகரித்துள்ளது. இதில் மியூசிக், மீடியா மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த செயலிகளை இந்தியர்கள் அதிகளவு டவுன்லோடு செய்துள்ளனர் என யாஹூவின் ஆய்வு நிறுவனமான ஃபிளர்ரி சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாமல் ஃபேப்லெட் சாதனங்களை சுமார் 61 சதவிகிதம் இந்தியர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளம் மற்றும் குறுந்தகவல் செயலிகளில் இந்தியர்கள் செலவிடும் நேரம் சுமார் 52% அதிகரித்துள்ளது, சர்வதேச அளவில் இது 44% வரை அதிகரித்துள்ளது.
2016இல் ஷாப்பிங் செயலிகள் தொடர்ந்து பிரபலமாகியுள்ளன. சர்வதேச அளவில் 31% வளர்ச்சியை சந்தித்துள்ள ஷாப்பங் செயலிகள், இந்தியாவில் 12% வளர்ச்சியடைந்துள்ளது. கேமிங் செயலிகளின் பயன்பாடு சர்வதேச அளவில் 4% சரிவை சந்தித்து இருந்தாலும் இந்திய சந்தையை பொருத்த வரை 8% வளர்ச்சியை பெற்றுள்ளது. வியாபாரம் மற்றும் வணிகம் சார்ந்த செயலிகளின் பயன்பாடு 176 சதவிகிதம் வரை உயர்ந்திருக்கும் நிலையில் தினசரி பயன்பாடுகள் சார்ந்த சேவைகளை வழங்கும் செயலிகள் கடந்த ஆண்டில் 99 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்த ஆய்வில் மொத்தம் 940,000 செயலிகளில், சர்வதேச அளவில் 2.1 பில்லியன் சாதனங்களிலும் இந்தியாவில் 58,000 செயலிகளை சுமார் 147 மில்லியன் சாதனங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஃபிளர்ரி தெரிவித்துள்ளது.