மகாராஷ்டிர மாநிலத்தில் நோயாளியுடைய உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிராக சுமார் 3000-க்கும் அதிகமான மருத்துவர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான உறுதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, சில பொறுப்பற்ற நபர்கள் மருத்துவர்களைத் தாக்கியதால் ஏழை மக்களுக்கு மருத்துவ வசதிகள் மறுக்கப்படுவது சரியில்லை. மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மருத்துவ பிரதிநிதிகளிடம் இதுதொடர்பாக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
மருத்துவர்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாதபடி தண்டனையின் அளவு அதிகரிக்கப்படும். சட்டங்கள் திருத்தம் செய்யப்படுவது தொடர்பாக விவாதம் நடத்தப்படும். மருத்துவர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.