காவிரி தொடர்பான வழக்கு இறுதிக்கட்ட விசாரணை மார்ச் 21 முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரை தினமும் நடைபெறும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். அதன்படி, காவிரி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 2000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் திறக்கவும் நீதிபதிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து காவிரி நீர் தொடர்பான விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனிடையே, கேரளாவில் புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக 15 நாட்களில் தமிழகத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அட்டப்பட்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு புதிய அணைகள் கட்ட உள்ளதாக எழுந்த புகார் குறித்து இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.