ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் போட்டியிடுவதில் இருந்து விலக வேண்டும் என்று மர்மநபர்கள் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தான்தான் என்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று தீபாவும் ஒரு பக்கம் தெரிவித்து வருகிறார்.
ஆர்.கே. நகர் இடைதேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ள இந்த நிலையில் மதுசூதனனுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளுமாறு இல்லையெனில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மதுசூதனனுக்கு கடந்த சில தினங்களாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக அவர் புகார் தெரிவித்தார். இதேபோல் ஆர்.கே.நகரில் போட்டியிடவுள்ள தீபாவுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அவர் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.