சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் உதயசூரியன் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசினார். “முன்பு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஒரு சிறிய பையை கொண்டு வந்து தாக்கல் செய்வார்கள். ஓ.பன்னீர்செல்வம் கூட சாதாரண முறையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இப்போது பட்ஜெட் எப்படி கொண்டு வரப்பட்டது? (அப்போது அவர் குறிப்பிட்ட ஒரு வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது)
அமைச்சர் ஜெயக்குமார் : ஆரம்ப காலத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் வரவு-செலவு தாக்கல் செய்யப்படும். ஆனால் தற்போது ரூ.1½ லட்சம் கோடி அளவுக்கு வரவு-செலவு தாக்கல் செய்யப்படுகிறது. அதனால் அதற்கு தகுந்த அளவில் காகிதங்கள் இருக்கும். பல்வேறு விளக்கங்கள் இருக்கும். ஓ.பி.எஸ். போல நாங்கள் ஆஸ்கார் அவார்டு வாங்கும் அளவு நடிகர் அல்ல.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். (திட்டங்கள் பற்றி விவரித்தார்). பேரறிஞர் அண்ணா சொல்லும்போது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று கூறினார். 17 ஆண்டுகள் மத்திய ஆளும் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்து இருந்தது. அப்போதே தமிழகத்துக்கு வேண்டியதை பெற்று இருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கும். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் : உறுப்பினர் உதயசூரியன் சில கருத்துக்களை கூறினார். அதற்கு பதில் சொல்லுவதை விட்டுவிட்டு அமைச்சர் வேறு எதையோ பேசுகிறார். நாங்கள் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்தபோது எத்தனையோ நல்ல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். தங்கநாற்கர நெடுஞ்சாலை திட்டம், மதுரவாயல் மேம்பால திட்டம், கத்திப்பாரா மேம்பாலம், மெட்ரோ ரெயில் என்று எத்தனையோ திட்டங்களை சொல்லலாம். நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சர் பதில் அளித்து பேசும்போது, பட்ஜெட் பற்றி அவரது கருத்துக்களை சொல்லலாம்.
நானும் பல கருத்துக்களை சொல்ல இருக்கிறேன். ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அதன் ரகசியம் காக்கப்பட வேண்டும். ஆனால் நிதி அமைச்சர் அதை தாக்கல் செய்வதற்கு முன்பே அதை வெளியே எடுத்து செல்ல என்ன உரிமை இருக்கிறது. நான் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் பார்த்தேன். அவர் பட்ஜெட்டை எங்கு எடுத்துச் சென்றார் என்பதை எல்லாம் காட்டினார்கள்.
அமைச்சர் ஜெயக்குமார் : ரகசியங்களை வெளியே சொல்லக்கூடாது என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறோம். பெரியவர்களிடம் வாழ்த்து பெற வேண்டும் என்ற முறையில் தான் எடுத்து செல்லப்பட்டதே தவிர எந்த ரகசியங்களும் வெளியாகவில்லை.
மு.க.ஸ்டாலின் : பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு அதை வெளியே எடுத்துச் சென்றது விதிமீறல்தான். இதுபற்றி நாங்கள் கவர்னரிடம் புகார் கொடுத்து இருக்கிறோம்.
ஜெயக்குமார் : ரகசியம் கசியும் அளவுக்கு எதுவுமே நடக்கவில்லை. எந்த விதிமுறையும் மீறப்படவில்லை.
இந்த நேரத்தில் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பேச அனுமதி கேட்டனர். சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே தி.மு.க. உறுப்பினர்கள் சில கருத்துக்களை கூற, அ.தி.மு.க. உறுப்பினர்களும் பதில் அளித்தனர். தி.மு.க.- அ.தி.மு.க. உறுப்பினர்கள் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் சிறிது நேரம் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, கே.பி.கே.சாமி ஆகியோர் எழுந்து நின்று சில கருத்துக்களை கூறினர். சபாநாயகர் அனைவரையும் எச்சரித்து அமைதிப்படுத்தினார்).
ஜெயக்குமார் : நினைவிடத்துக்கு சென்று ஆசி பெறுவது விதிமீறல் செயல் அல்ல. (இவ்வாறு கூறி விட்டு ஒரு கருத்தை தெரிவித்தார்).
மு.க.ஸ்டாலின்: அம்மாவிடம் ஆசி பெற வேண்டும் என்றால் அவர் மட்டும் தனியாக சென்று இருக்க வேண்டும். பட்ஜெட்டை கொண்டு சென்றது மரபு மீறலாகும். அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு ஆதாரம் அளிக்க வேண்டும். அல்லது தகுந்த பதில் அளிக்க வேண்டும். (அப்போது மீண்டும் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டு வாக்குவாதங்களும் தொடர்ந்தன).
அவை முன்னவர் செங்கோட்டையன் : அமைச்சர் குறிப்பிட்டதையும், அது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் கூறியதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதைத் தொடர்ந்து அமைச்சர் பேசியதும், மு.க.ஸ்டாலின் கருத்தும் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.