வெளிநாட்டு குளிர்பான விற்பனைக்கு தடைவிதிக்க கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

தாமிரபரணி ஆற்று தண்ணீரை வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதை கண்டித்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நெல்லை ராம்குமார், குமரி நாகராஜன், தூத்துக்குடி வெற்றி சீலன், இசக்கி துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கண்டன உரையாற்றினார். தாமிரபரணி ஆற்று தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதை கடுமையாக எதிர்க்கின்றோம். தாமிரபரணியில் இருந்து உபரி தண்ணீரை குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் கூறுவது ஏற்புடையதல்ல. இங்கு குடிநீருக்கே பற்றாக்குறை உள்ளது. விதைத்த பயிர்கள் கருகுகின்றன. இந்த நிலையில் ஆற்று தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு ஏன் வழங்க வேண்டும்? தமிழக வியாபாரிகள் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்கள். அதனை வரவேற்கிறேன்.

கேரளாவில் வெளிநாட்டு குளிர்பானங்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தமிழகத்திலும் வெளிநாட்டு குளிர்பானங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும். உணவு தானியங்களை உற்பத்தி செய்து உணவளிக்கும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது எதிர்காலத்தில் உணவு பஞ்சத்திற்கு வழி வகுக்கும். எனவே விவசாயிகள் தற்கொலை விசயத்தில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது.

ஜல்லிக்கட்டு மற்றும் நெடுவாசல் களத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது போல தாமிரபரணி தண்ணீரை காக்கவும் இளைஞர்கள் போராடுவார்கள். உடனடியாக பன்னாட்டு நிறுவன குளிர்பானங்களுக்கு தாமிரபரணி தண்ணீரை வழங்குவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் குளிர்பான ஆலையை முற்றுகையிட்டும், உண்ணா விரத அறப்போராட்டமும் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.