சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் அதிரடிப் படையினரின் என்கவுண்டரில் 6 நக்சலைட்டுகள் உயிரிழப்பு

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.  கடந்த 11ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியதில் 9 வீரர்கள் பலியானார்கள்.

நக்சலைட்டுகளை ஒடுக்க மாநில போலீசாருடன் இணைந்து மத்திய படையினரும் பாதுகாப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இம்மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பர்டம் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிரடிப்படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.