உத்தரப்பிரதேச மாநில புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு

உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டபேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா 312 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. பா.ஜனதா கூட்டணி ஒட்டு மொத்தமாக 325 இடங்களை கைப்பற்றியது. மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், மனோஜ்சின்கா, மகேஷ் சர்மா மற்றும் உத்தர பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, லக்னோ மேயர் தினேஷ் சர்மா ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருந்தனர்.  புதிய முதல்-மந்திரியை ஒருமனதாக தேர்வு செய்ய பா.ஜனதா மேலிடம் முடிவு செய்தது.

ஆனால் கடும் போட்டி நிலவியதால் முதல்- மந்திரியை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி அதில் முதல்- மந்திரியை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. முதல்-மந்திரி தேர்வு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுடனும் பா.ஜனதா தலைமை ஆலோசனை நடத்தியது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில் லக்னோவில் இன்று மாலை 4 மணிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினரான யோகி ஆதித்யநாத் புதிய முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, யோகி ஆதித்யநாத் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுக்க இருக்கிறார். பின்னர் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.