பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஆன்லைனில் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

இந்தியாவில் ஆன்லைன் உணவு விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொருட்கள் அதிகப்படியான தள்ளுபடியுடன் வழங்கப்படுவதே விற்பனைக்கு முக்கிய காரணம் ஆகும். அடுத்த முறை ஆன்லைனில் நீங்கள் உணவு வாங்கும் போது பொருளின் எக்ஸ்பைரி டேட் (காலாவதியாகும் தேதி) அவசியம் கவனிக்க வேண்டும்.  பெரும்பாலான இணையத்தளங்களில் பொருட்களின் காலாவதி தேதியை பார்க்கும் வசதி வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக பலரும் பொருட்களை வாங்கி சில நாட்கள் முதல் ஒரு மாதம் வரை குறுகிய காலகட்டத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

குறிப்பிட்ட பொருளின் காலாவதி தேதி 12 மாதங்கள் என்றாலும் அவை வாங்கி விற்பனையாகாமல் இருக்கும் போது இவ்வாறான சூழல் ஏற்படுகிறது. சில ஆன்லைன் தளங்களில் காலாவதியாக இருக்கும் பொருட்களுக்கு மட்டும் அதிக தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இத்துடன் பெரும்பாலானோர் விரைவில் காலாவதியாக இருக்கும் பொருட்களை ஆன்லைனில் பெற்றுள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் சார்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மக்கள் இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்றே கூற வேண்டும்.

மறுபக்கம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் தங்களுக்கு வரும் பரிந்துரை, மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப சேவைகளை மாற்றி வழங்கி வருவதாக தெரிவித்துள்ளன.  அந்த வகையில் குரோஃபர்ஸ் தளத்தில் வாடிக்கையாளர் பொருட்களை முன்பதிவு செய்யும் முன் அதன் காலாவதி தேதியை அறிந்து பார்க்கும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் விற்பனையை பொருத்த வரை 1000-இல் 3 பேருக்கும் குறைவானோர் மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்ட பொருள் சரியில்லை என குற்றச்சாட்டு தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.