வள்ளுவர் கோட்டம் அருகே இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் வைகோ, வெள்ளையன் கைது

நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை ம.தி.மு.க.வினர் இன்று முற்றுகையிட போவதாக வைகோ அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்கு வள்ளுவர் கோட்டம் அருகே ம.தி.மு.க.வினர் திரண்டனர். அங்கு வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லைசத்யா உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அவர்களுடன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனும் கலந்து கொண்டு முழக்கமிட்டார். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா செயல்படக்கூடாது. இலங்கைக்கு ஆதரவாக பிரிட்டன், அமெரிக்கா செயல்படுகிறது. ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க கூடாது. ஐ.நா.வில் இலங்கையின் தீர்மானம் நிறைவேறினால் மனித உரிமை கவுன்சில் நீதி குழி தோண்டி புதைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் நோக்கி முற்றுகையிட புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் வைகோ, வெள்ளையன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் தேவராஜ், சினிமா இயக்குனர் புகழேந்தி உள்பட ஏராளமானோர் கைதானார்கள்.