தமிழ் சினிமாவில் பெண் காவலர்களை பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் மிக மிக அவசரம் படம் அவற்றில் இருந்து தனித்து நிற்கும் விதமாக வெளியாகியுள்ளது. அதனால்தான் ரசிகர்களின், குறிப்பாக தாய்மார்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் லிங்கா இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது,
“இயக்குநர் சுரேஷ் காமாட்சி இந்த கதையைப் பற்றி 20 நிமிடம் என்னிடம் கூறியதும் அடுத்த நொடி நான் யோசிக்கவே இல்லை.. அவரிடம் இதில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்..
காரணம் இந்த படத்தில் அவர் சொல்லியிருக்கும் கருத்து அப்படிப்பட்டது..
பெண் காவலர்கள் என்று மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் வேலை பார்க்கும் பெண்களுக்கு, ஏன் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்குக் கூட, ஏதோ ஒரு விதத்தில் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது..
அவர்களை ஒதுக்கி வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்..
அதை ரொம்ப அழுத்தமாக இந்தக் கதை சொல்வதால் இதில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன்..
படத்தில் என்னுடைய கதாபாத்திரம் குடிகாரன் என்றாலும் கதாநாயகிக்கு இடைஞ்சல் கொடுக்கும் நபர் என்றாலும் தன்னை நம்பியிருக்கும் பெண்ணிடம் அத்துமீறாத ஒரு கண்ணியமான கதாபாத்திரமாக இருந்தது என்னை தயக்கமின்றி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தது.. பெண்கள் கஷ்டப்பட்டு சிறுகச்சிறுக சேமித்து வைக்கும் பணத்தை, அவர்கள் வீட்டில் இருக்கும் யாரோ ஒரு நபர் எப்படி நச்சரித்து வாங்கிச்சென்று குடித்து அழிக்கிறார்கள் என்பதை பிரதிபலிப்பதற்கு இந்த கதாபாத்திரத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்ததற்கு இயக்குநர் சுரேஷ் காமாட்சிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது.