இயக்குநர் சுரேஷ் காமாட்சி ஈகோவும் இல்லாத மனிதர்- ஒளிப்பதிவாளர் பாலபரணி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்..

தமிழ் சினிமாவில் பெண் காவலர்களைப் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் “மிக மிக அவசரம்” படம் அவற்றில் இருந்து தனித்து நிற்கும் விதமாக வெளியாகியுள்ளது.

அதனால்தான் ரசிகர்களின், குறிப்பாக தாய்மார்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் பாலபரணி படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து கூறும்போது,

“இந்த படத்தின் கதையை எழுதிய இயக்குநர் ஜெகன் என்னிடம் இந்த கதை பற்றிக் கூறியபோது…

இது நிச்சயம் ஹிட்டாகும் எனத் தோன்றியது..

இயக்குநராகும் ஆசையில் சினிமாவிற்குள் நுழைந்த சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளராக மாறி, தற்போது முதன்முறையாக இந்தப்படம் மூலம் டைரக்ஷனில் நுழைந்து இருக்கிறார்.. காலையில் ஆரம்பித்து மாலைக்குள் நடைபெறும் கதை என்பதால் இந்த படத்தில் செயற்கையாக லைட் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கை வெளிச்சத்திலேயே காட்சிகளை படமாக்கினோம்..

ரெட் நிறுவனத்தின் ஹீலியம் வெப்பன் என்கிற 8k கேமராவை முதல் முறையாக இந்த படத்தில் தான் பயன்படுத்தினோம்..

ஆனால் இந்தப்படம் வெளியாக தாமதமானதால் அதற்கு முன்னதாக நிறைய படங்கள் இந்த கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்டுவிட்டன.

நாங்கள் படப்பிடிப்பு நடத்தியது எடப்பாடி அருகே உள்ள ஒரு அணைக்கட்டில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இடத்திலுள்ள ஒரு பாலத்தில் தான்..

ஒரு காட்சியில் சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டும் தண்ணீர் தொட்டிக்குள் உள்ள தண்ணீரில் முழு பாலமும் பிரதிபலிப்பதாக ஒரு காட்சியை படமாக்கினோம்..

இயக்குநர் சுரேஷ் காமாட்சி எந்தவித ஈகோவும் இல்லாத மனிதர்..

அதனால் அவருடன் கலந்து ஆலோசித்து காட்சிகளை சிறப்பாக படமாக்க முடிந்தது.

கதாநாயகி ஸ்ரீபிரியங்காவும் மிகச் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்” என்றார்.

ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது.