கர்நாடக பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

கர்நாடக மாநில சட்டசபையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்மந்திரி சித்தராமையா இன்று தாக்கல் செய்தார். அதில் விளையாட்டு துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். முக்கியமாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அளிக்கப்படும் என அறிவித்தார். வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 2 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக அளிக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டியில் வெல்பவர்களுக்கு பரிசுத் தொகை அளிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் 4 இடங்களில் உள்ள விளையாட்டு அகாடமிகளை மேம்படுத்த தலா 1 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்க அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் தகவல்களை ஒன்றினைத்து தகவல் மையம் உருவாக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் சித்தராமையா அறிவித்தார்.