“அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் விளைச்சல்” என்று எழுதி இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அப்படியான உழைப்பின் விளைச்சலாகத் தான் நெடுநல்வாடை படத்தின் வெற்றியைப் பார்க்க வேண்டிய இருக்கிறது. சென்றவாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான நெடுநல்வாடை படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், ரசிகர்களிடம் படத்தைக் கொண்டுசேர்த்த பத்திரிகையாளர்களும் தான் பெருங்காரணம். அப்படியான ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
படத்தின் கதாநாயகன் இளங்கோ பேசியதாவது,
“இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து சாரை ஒரு காபிஷாப்பில் பார்த்தேன். அப்போது அவரோடு போட்டோ எடுக்க ஆசைப்பட்டேன். அவர் அனுமதித்தார். அப்போது நான் சினிமாவில் நடிக்க முயற்சிக்கிறேன் என்றதும், ” முயற்சி செய்யுங்கள். வாய்ப்பு கிடைக்கும்”என்று சொன்னார். அவர் சொல்லி இரண்டு மாதத்தில் நான் நெடுநல்வாடை படத்தில் கமிட் ஆனேன். இன்று இது எனக்கு கனவு போல இருக்கிறது. இந்தக்கனவை நிறைவேற்றித் தந்த இயக்குநர் செல்வகண்ணன் அவர்களுக்கு நன்றி.” என்றார்
இயக்குநர் செல்வகண்ணன் பேசியதாவது,
சென்றவாரம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, வெற்றிவிழாவில் சந்திப்போம் என்று கொஞ்சம் ஓவர் கான்பிடன்ஸில் தான் பேசினேன். ஆனால் இன்று அது சாத்தியமாகி இருக்கிறது என்றால் அது ஊடகங்களாலும் மக்களாலும் தான். இது ஒருபெரிய படம் இல்லை. சாதாரண படம். ஆனால் அதைப் பெரிய படமாக மாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு மட்டும் அல்லாமல் தமிழ் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நெடுநல்வாடைத் பேசுபொருளாக இருக்கிறது. என்னுடன் பணிபுரிந்த அனைவரும் படத்தின் பூஜை போடும்போது எப்படி ஒன்றாக இருந்தோமோ அதேபோல் இப்போதும் ஒன்றாக இருக்கிறோம். இந்தப்படத்தை என்மீது நம்பிக்கை வைத்து தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது. அய்யா வைரமுத்து அவர்கள் இல்லாவிட்டால் இந்தப்படத்தின் வெற்றி இல்லை. படத்தை நல்லபடியாக எடுப்பதை விட அதைக் கொண்டுபோய் சேர்ப்பது தான் பெரிய விசயம். அப்படிச் சரியாக கொண்டுசேர்த்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஜேம்ஸ் அவர்களுக்கும் நன்றி. என் வாழ்வின் லட்சியமே கவிஞர் வைரமுத்து அவரோடு ஒரு போட்டோ எடுக்கவேண்டும் என்பது தான். ஒருநாள் அது சாத்தியமாகியது. பின் அவர் வீட்டில் அவருக்கான அழைப்பிதழை சரிசெய்யும் வேலை செய்தேன். அப்போது ஒருநாள் அவர் என்னை அழைத்துச் சொன்னார். “உன் எழுத்தில் ஒரு நேர்த்தி இருக்கிறது. நீ சினிமாவில் ஜெயிப்பாய்” என்று வாழ்த்தினார். என்னை சினிமாவில் முதலில் வாழ்த்தியது கவிஞர் தான். இன்று என் முதல் படத்திலே அவரோடு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரும்பேறு. இந்தப்படத்தில் இடம்பெற்ற கருவாத்தேவா பாடல் தான் இந்தப்படத்தைக் காப்பாற்றியது. அந்த வகையில் இந்தப்படத்தை காப்பாற்றியது வைரமுத்து தான்” என்றார்
கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது,
சில மேடைகளுக்கு அசைபோட்டு கொண்டு வருவது உண்டு. இன்னும் சில மேடைகளுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து வருவோம். இந்த மேடைக்கு வெள்ளைத் தாளாக வந்தேன். செல்வகண்ணன் என்னை உருக்கி விட்டார். இந்த வாழ்க்கை செல்வகண்ணன் அவர்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் பொருந்தும். ஒரு குடும்பத்தில் ஒரு இருமுகிற தாத்தா இருந்தால் எவ்வளவு நல்லது தெரியுமா? ஒரு கிழவி இருந்தால் எவ்வளவு நம்பிக்கை தெரியுமா?கிழவனும் கிழவியும் இருப்பது ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு. தம்பி செல்வகண்ணன் எனக்கு ஊதியம் தரவில்லை என்றார். “தம்பி நீ எனக்கு இந்தப்படத்தை விட பெரிய ஊதியம் தரமுடியுமா? ஒரு இயக்குநர் மேடையில் கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்தி இருக்கிறான் என்றால் அதைவிட எனக்குப் பெரிய ஊதியம் ஏது? இந்தப்படத்தில் ஒரு நல்ல நடிகன் கிடைத்திருக்கிறான். நல்ல இசை அமைப்பாளர் கிடைத்திருக்கிறார். அதைவிட இந்த நெடுநல்வாடை படம் மூலமாக 50 தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். தம்பி செல்வகண்ணனுக்கு நான் இலக்கியம் சார்பாக நன்றி சொல்கிறேன். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற நிலையில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள். நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள். நுட்பமான விசயங்கள் நெடுநல்வாடை படத்தில் இருக்கும். கணவன் வீட்டில் இருந்து குழந்தைகளோடு வரும் ஒருதாய் கிணற்றை எட்டிப்பார்க்கும் காட்சியில் என் மனம் துடித்துவிட்டது.
இந்தப்பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அரத்தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. ஒன்று சொல்லட்டுமா? இந்தப்படம் சிறந்தபடம் என்று தெரியும். ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறுமா?என்ற சந்தேகம் இருந்தது. இப்போது வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் ஊடகங்கள் தான். படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாக கிடைக்கும் என்று நம்புகிறேன். ஜோஸ் பிராங்க்ளின் இசையில் இளையராஜாவின் சாயல் இருப்பதாய் ஒரு பத்திரிகை எழுதி இருந்தது. இது உனக்குப் பாராட்டு தம்பி. ஒளிப்பதிவை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். எடிட்டர் காசி விஸ்வநாதன் இந்தப்படத்தின் பொக்கிஷம். எஸ்கேப்.ஆர்டிஸ்ட் மதனுக்கு நன்றி. தமிழ் திரைப்பட பாடல்கள் சற்றே தொய்வடைந்து இருக்கிறது. படத்தின் நீளமும் குறைந்து விட்டது. 2 மணிநேரம் பத்து நிமிடங்கள் உள்ள படத்தில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். அதுபோல் திரைப்படப் பாடல் பாமரனின் கவிதை என்பேன். இந்தப்படத்தில் பங்காற்றிய அனைவரையும் தனித்தனியாக வாழ்த்துகிறேன்” என்று அனைவரின் பெயரையும் வாசித்து விடை பெற்றார் கவிப்பேரரசு.