உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தனிநபர்களின் சொத்து மற்றும் நிதிமுதலீடு விவரங்களை, பனாமாவில் உள்ள மொஸ்ஸாக் ஃபொன்செக்கா ((Mossack Fonseca)) என்ற சட்ட நிறுவனம் ரகசியமாக பராமரித்து வந்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் வெளியில் கசிந்தபோது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகன்கள் ஹுசைன், ஹசன், மகள் மரியம் நவாஸ், மருமகன் சஃப்தார் நெருங்கிய உறவினரும் பாகிஸ்தான் நிதியமைச்சருமான இஷாக் தர் ஆகியோரது பெயர்களும் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றிருந்தது அந்நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பியது.
வரி ஏய்ப்பு செய்து, கணக்கு காட்டாமல் வெளிநாடுகளில் முதலீடுகளை செய்திருப்பது பற்றிய விவரங்களும் இந்த பனாமா ஆவணங்கள் மூலம் அம்பலமானது. முதல்முறையாக பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது, ஊழல் பணத்தின் மூலம் நவாஸ் ஷெரீஃப் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டு இருந்தது. போலியான நிறுவனங்கள் பெயரில் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் இந்த சொத்துகளை நிர்வகித்து வருவதாகவும் புகார் கூறப்பட்ட நிலையில், சொத்து குவிப்பு தொடர்பான பனாமா ஆவணங்கள் வெளியானது நவாஸ் ஷெரீஃபுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கை பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அதில் 2 நீதிபதிகள், பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்ய கடந்த ஏப்ரலில் பரிந்துரைத்தனர். குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் பற்றி, கூட்டு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த மற்ற 3 நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் கடந்த ஏப்ரலில் நவாஸ் ஷெரீஃபின் பதவி தப்பியது. இந்நிலையில், நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர், வரி ஏய்ப்பு செய்து போலியான ஆவணங்கள் மூலம், வெளிநாடுகளில் சொத்துகளை குவித்திருப்பதை கூட்டுப் புலனாய்வுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அரசுப் பதவிகள் வகிப்பதற்கு வாழ்நாள் முழுவதற்கும் தகுதி நீக்கம் செய்து, அமர்வில் இடம்பெற்றிருந்த 5 நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவாஸின் உறவினரும், பாகிஸ்தான் நிதியமைச்சருமான இஷாக் தர்ரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, நவாஸ் ஷெரீஃப் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி, உச்சநீதிமன்ற வளாகத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நவாஸ் ஷெரீஃப் முதல் முறையாக பிரதமராக பதவி வகித்தபோது, ஊழல் குற்றச்சாட்டுகளால் ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக, 1993ஆம் ஆண்டில் பதவி விலகினார். இரண்டாவது முறையாக பிரதமராக இருந்தபோது, 1999ஆம் ஆண்டில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் நவாஸ் ஷெரீஃப், முஷாரஃப்பால் பிரதமர் பதவியிலிருந்து துரத்தப்பட்டார். தற்போது மூன்றாவது முறையாக, பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னரே, நவாஸ் ஷெரீஃப் பதவி இழந்துள்ளார்.