முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். முள்ளங்கி பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்களை உடைய இது ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. நச்சுக்களை வெளியேற்றி புற்றுநோய் வராமல் தடுக்கிறது. முள்ளங்கியை பயன்படுத்தி கல்லீரலை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: முள்ளங்கி, சீரகம், மஞ்சள்.

செய்முறை : முள்ளங்கி பசை 2 ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி வாரம் ஒருமுறை குடித்துவர கல்லீரல் பலப்படும். பசியை தூண்டும். பல்வேறு நன்மைகளை கொண்ட முள்ளங்கி, ஈரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும் உணவாகிறது.  ஈரல் அழற்சிக்கு மருந்தாகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்க கூடியது. ஜீரண பாதையை சுத்தப்படுத்துகிறது. முள்ளங்கியை கொண்டு மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், பனங்கற்கண்டு.  செய்முறை: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முள்ளங்கி விதைப்பொடி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி உணவுக்கு முன் இருவேளை குடித்துவந்தால், மாதவிலக்கை தூண்டி முறைப்படுத்தும். மாதவிலக்கு கோளாறு சரியாகும். முள்ளங்கியை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி, தயிர். செய்முறை: 50 முதல் 100 மில்லி வரை முள்ளங்கி சாறு எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர அல்சர், வெள்ளைபோக்கு, மூலம் ஆகிய பிரச்னை சரியாகும்.  புற்றுநோய் வராமல் தடுக்கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் போக்குகிறது. சிறுநீர் கற்களை கரைத்து வெளியேற்றுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முள்ளங்கி ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது. பெண்களின் பிரச்னையான மாதவிலக்கை சீர் செய்கிறது. பித்தத்தை சமன் செய்யும் தன்மை கொண்டது. முள்ளங்கி விதையை பயன்படுத்தி வெண்புள்ளிகளை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, இஞ்சி.

செய்முறை: முள்ளங்கி விதைப் பொடி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து பூசிவர வெண்புள்ளிகள் மறையும். உணவாக பயன்படும் முள்ளங்கி அற்புதமான மருந்தாகிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. முள்ளங்கி இலை சாப்பிட்டுவர அது சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வீக்கத்தை கரைக்க கூடியதாகிறது. எளிதில் கிடைக்க கூடிய முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் ஆரோக்கியம் பெறும். அடிக்கடி ஏற்படும் தும்மலை போக்குவதற்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: தூதுவளை, மிளகுப்பொடி, தேன். செய்முறை: தூதுவளை பொடியுடன் சமஅளவு மிளகுப்பொடி சேர்த்து தேனிலோ அல்லது சுடுநீரிலோ கலந்து சாப்பிட்டு வர தும்மல் சரியாகும்.