கண் அழுத்த நோய்க்கு கண் சொட்டுமருந்தை பயன்படுத்துவதிலிருந்து விடுதலை தரும் குறைந்த ஊடுருவல் அறுவைசிகிச்சை

சென்னை, 19 ஜனவரி, 2024: டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை – சென்னை, கண் அழுத்த நோய்க்கு குறைந்த ஊடுருவல் உள்ள அறுவைசிகிச்சையின் மூலம் கண் அழுத்த நோய்க்காக கண் சொட்டுமருந்தை 10 ஆண்டுகளாக தினசரி பயன்படுத்தி வந்த 63 வயதான ஒரு நோயாளிக்கு அதிலிருந்து விடுதலை அளித்திருக்கிறது. இம்மருத்துவமனையின் திறன்மிக்க அறுவைசிகிச்சை மருத்துவர்களது குழுவால் மேற்கொள்ளப்பட்ட 10 நிமிட MIGS அறுவைசிகிச்சை, கண்ணுக்குள் இருந்த அழுத்தத்தை கணிசமான அளவு குறைத்திருக்கிறது. இந்த அழுத்தமே கண் அழுத்த நோய்க்கான அடிப்படை காரணம். இந்த வெற்றிகர அறுவைசிகிச்சையினால், கண் அழுத்த பாதிப்பு மேலும் மோசமாகாமல் தடுப்பதற்கு கண் சொட்டுமருந்தை இந்நோயாளி தினசரி பயன்படுத்துவதை இது அவசியமற்றதாக ஆக்கியிருக்கிறது.

மிக அதிகமாக கண்டறியப்படும் கண் கோளாறுகளுள் இரண்டாவது நிலையிலுள்ள கண் அழுத்த நோய், பார்வைத்திறனிழப்புக்கான மூன்றாவது முன்னணி காரணமாகவும் இருக்கிறது. 100 நபர்களில் 3 பேரை இது பாதிக்கிறது. நம் இந்திய நாட்டில், 40 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள சுமார் 11.9 மில்லியன் நபர்கள் கண் அழுத்த நோய் பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். கண் அழுத்த நோய் வந்தபிறகு சிகிச்சையின் மூலம் அதனை முற்றிலுமாக குணப்படுத்த இயலாது; படிப்படியாக வளர்ச்சியடையக்கூடிய பார்வை நரம்பு சார்ந்த இயக்கக் கோளாறாக இது இருக்கிறது. கண்ணுக்குள் நீர்மங்கள் உட்பாய்வு அதிகரிக்கும்போது அல்லது வெளிப்பாய்வு குறையும்போது கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிக்கும் நேரத்தில் இது நிகழ்கிறது. அதிகரித்த அழுத்தம் பார்வை நரம்புகளை சேதப்படுத்துகிறது. கண்ணின் திரவ வெளியேற்ற அமைப்பை மேம்படுத்துவதற்கு மிகச்சிறிய ஸ்டண்ட்களை பதியம் செய்வது போன்ற பல உத்திகளைப் பயன்படுத்தி திரவ வெளிப்பாய்வை அதிகரிப்பதன் மூலம் கண்ணின் உள்ளார்ந்த அழுத்தத்தை MIGS – ஆல் குறைக்க முடியும்.

டாக்டர். அகர்வால்ஸ் – ன் அறுவைசிகிச்சை நிபுணர்கள் குழு, சென்னையைச் சேர்ந்த இந்த முதிய நோயாளிக்கு இரு ஸ்டென்ட்களை பொருத்தி அவரது கண்ணின் திரவ வெளியேற்றத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கண்ணுக்குள் இருந்த அழுத்தத்தை இந்த அறுவைசிகிச்சை சுமார் 35% வரை வெற்றிகரமாக குறைத்திருக்கிறது. கண் சொட்டுமருந்து பயன்படுத்துவதை இந்நோயாளி இனிமேல் நிறுத்திவிடலாம். இந்த அறுவைசிகிச்சையைத் தொடர்ந்து குறித்த காலஅளவுகளில் கண் அழுத்த கண்காணிப்பு மற்றும் கண் நரம்பு பரிசோதனையை மட்டும் செய்துகொண்டால் போதுமானது.

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் செயலாக்க இயக்குனர் & தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். அஸ்வின் அகர்வால், MIGS சிகிச்சை உத்தியின் பலன்கள் பற்றி பேசுகையில், “MIGS என்பது, கிளாகோமா என அழைக்கப்படும் கண் அழுத்த நோய்க்கான அறுவைசிகிச்சையின் ஒரு புதிய வகையினமாகும். தாங்குதிசு நீக்க சிகிச்சை (ட்ராபெகுலெக்டோமி) என்பதற்கு மாற்றாக அதிக பாதுகாப்பான மற்றும் குறைவான ஊடுருவல் உள்ள சிகிச்சை உத்தியை வழங்குவதன் மூலம் கண் அழுத்த நோய் மேலாண்மை தளத்தையே இது மாற்றியமைத்திருக்கிறது. கண் அழுத்த நோய்க்கான வழக்கமான அறுவைசிகிச்சைகளோடு தொடர்புடைய சிக்கல்களுக்கான இடர்வாய்ப்பை குறைக்க வேண்டுமென்ற குறிப்பிட்ட இலக்குடன் இந்த உத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகக்குறைந்த அளவிலான நுண் ஊடுருவல் மற்றும் தையல் போடும் அவசியமின்மை இதன் சிறப்பம்சங்களாகும். இச்சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி வேகமாக குணமடைந்து, இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். ஒரு சிறப்பான 24 மணி நேர IOP கட்டுப்பாட்டை MIGS வழங்குகிறது. ஐஸ்டெண்ட், கஹுக்ஸ் டியூயல் பிளேடு, BANG மற்றும் GATT உட்பட, இந்தியாவில் பல வகைகளில் MIGS செயல்முறைகள் மற்றும் சாதனங்கள் தற்போது கிடைக்கின்றன. MIGS – ன் காரணமாக கண் அழுத்த நோய் பாதிப்புள்ள நோயாளிகளின் வாழ்க்கை தரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் சாத்தியமாகிறது. கண் சொட்டு மருந்துகள் போடும் சிரமத்திலிருந்து அவர்கள் விடுதலை பெற முடியும் அல்லது பயன்படுத்தும் மருந்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். அகர்வால்ஸ் மருத்துவமனையில், இத்தகைய சிகிச்சைகளில் 80% வெற்றி விகிதம் எட்டப்பட்டிருக்கிறது. இவற்றுள், 50% நேர்வுகளில், 40% -க்கும் கூடுதலாக கண்ணின் உள்ளார்ந்த அழுத்தம் குறைக்கப்பட்டிருக்கிறது.” என்று கூறினார்.

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய தலைவர் – மருத்துவ சேவைகள் டாக்டர். எஸ் சௌந்தரி பேசுகையில், “பாதிப்பு நிலையின் வளர்ச்சி இறுதி நிலையை எட்டும் வரை கண்டறியப்படுவதில்லை என்பதால், கண் அழுத்த நோய் (கிளாகோமா) என்பது, சத்தமின்றி மௌனமாக தாக்கும் திறன் கொண்ட நோயாகும். வழக்கமாகவே இத்தகைய நோயாளிகள் மிக தாமதமாகவே மருத்துவமனைக்கு வருகின்றனர். இதுநாள் வரை இதற்கு முறையான குணமளிக்கும் மருந்து கண்டறியப்படவில்லை. எனவே, நமக்கு இருக்கும் ஒரே சிகிச்சை, மருந்துகள் அல்லது அறுவைசிகிச்சை சார்ந்த மேலாண்மையே. கிளாகோமா வளர்ச்சியடையக்கூடிய நோயாக இருப்பினும், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதன் மூலம் பார்வைத்திறன் மேலும் குறையாமல் அல்லது பார்வைத்திறன் இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். கண்ணின் உள்ளார்ந்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிகிச்சையில் மருந்துகள், லேசர் மற்றும் அறுவைசிகிச்சை போன்ற பல்வேறு வழிமுறைகள் இடம் பெறுகின்றன. லேசான கண் அழுத்த நோய் நேர்வின்போது கண் சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மிதமானதிலிருந்து, தீவிரமான பாதிப்பு வரையிலான நேர்வுகளில் அறுவைசிகிச்சை செய்வதை தவிர வேறு வழியில்லை,” என்று கூறினார்.

“தாங்குதிசு நீக்க சிகிச்சை (ட்ராபெகுலெக்டோமி) என அறியப்படும் வழக்கமான அறுவைசிகிச்சையில் திரவ வடிதலுக்காக ஒரு புதிய பாதை உருவாக்கப்படுகிறது. இந்த வழிமுறையில், அளவுக்கு அதிக வடிகட்டலுக்கான இடர் எப்போதும் இருக்கிறது. இதன் காரணமாக, கண்ணுக்குள் மிகவும் குறைவான அழுத்தமும் மற்றும் அறுவைசிகிச்சை செய்யும் இடத்தில் தொற்றும் ஏற்படக்கூடும். MIGS உத்தியில், திரவ வெளிப்பாய்வை மேம்படுத்துவதற்கு கண்ணின் இயல்பான வடிகால் இயக்க முறையை அறுவைசிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர்.,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.

MIGS சிகிச்சை உத்தியின் சிறப்பான ஆதாயங்களை கருத்தில் கொண்டு, கண் அழுத்த நோயுள்ள நபர்களுக்காக வரும் மார்ச் மாதத்தில் கருத்தரங்கு நிகழ்வு ஒன்றை வருடாந்திர நிகழ்வாக நடத்த டாக்டர். அகர்வால்ஸ் திட்டமிட்டிருக்கிறது. இதன் கண் மருத்துவ நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையே நேரடி கலந்துரையாடல்களை இந்நிகழ்வு ஏதுவாக்கும். கண் அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வையும் மற்றும் அது குறித்த புரிதலையும் இக்கருத்தரங்கு சிறப்பாக அதிகரிக்கும்.