மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மலிவு விலையில் 4ஜி வோல்ட்இ போன்களை அறிமுகம் செய்ய திட்டம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் தொடர்ந்து குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மைக்ரோமேக்ஸ் தயாரிக்கும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்களில் மட்டும் பயன்படுத்தக் கூடிய 4ஜி வோல்ட்இ வசதியானது ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம் செய்யப்பட்டது முதல் அதிக பிரபலமாகியுள்ளது.

இந்திய சந்தையின் ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  மைக்ரோமேக்ஸ் தயாரிக்க இருக்கும் பீச்சர் போன்கள் பாரத் ஒன் என அழைக்கப்படும் என்றும் இவற்றின் விலை ரூ.2500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன் பாரத் டூ என அழைக்கப்படலாம் என்றும் இதன் விலை ரூ.3,300க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இரு மொபைல் போன்களும் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனில் டிரான்செர்வ் மற்றும் எம்விசா டிஜிட்டல் பண பரிமாற்றங்களை மேற்கொள்ள வழி செய்ய சிறப்பு வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

பாரத் ஒன் பீச்சர் போனில் டச் மற்றும் டைப் செய்யும் வசதி வழங்கப்படலாம் என்றும் இதில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்படுகிறது. இந்த மொபைல் போன் இண்டர்நெட் வசதி கொண்ட பீச்சர் போன்களை விரும்புவோருக்கானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பாரத் டூ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு இயங்குதளமும் டிஜிட்டல் பண பரிமாற்றங்களை மேற்கொள்ள உதவும் வசதிகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.