இரண்டாவது முறையாக விஜய்யை வைத்து ‘மெர்சல்’ படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் அட்லீ. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, கடந்த வாரம் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மெர்சல்’ பட தலைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். 2014ஆம் ஆண்டு ‘மெர்சலாயிட்டேன்’ என்ற படத்தின் பெயரை தான் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதனை புதுப்பிக்கும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது இந்த தலைப்பை விஜய் படத்திற்கு வைத்துள்ளதால், படத்தின் தலைப்பிற்கு தடைக் கோரியிருந்தார் ராஜேந்திரன்.
‘மெர்சல்’ படத்திற்கு பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனவே படத்தின் பெயருக்கு தடை விதிக்கக் கூடாது என்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், வருகிற 3ஆம் தேதி வரை ‘மெர்சல்’ பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்யக் கூடாது என்று தடை விதித்தது. மேலும், இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று படத்தின் தலைப்பு விவகாரம் தொடர்பாக அனைத்து விசாரணைகளும் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால், வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள் (6ஆம் தேதி) அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.