இசைக் கலைஞர்களின் கனவும் போராட்டமும் பேசும் ‘மீசைய முறுக்கு 2’ – ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து, நாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இளமை, இசை, காதல், நடனம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி, முதல் பாகம் தனது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பயோபிக் என்றாலும், ‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, கனவுகள், போராட்டங்கள் மற்றும் பயணங்களைப் பேசும் பரந்த கதைக்களம் கொண்ட படம் என்று தெரிவித்தார்.

குறிப்பாக, கானா கலைஞர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களையும் போராட்டங்களையும் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தும் உலகத்தையும் இப்படம் பதிவு செய்வதாக அவர் கூறினார்.

முதல் பாகத்தில் மறைந்த நடிகர் விவேக் நடித்த தந்தை கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் பாபா பாஸ்கர் நடித்துள்ளார். அவருக்கு இந்தப் படம் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று ஆதி நம்பிக்கை தெரிவித்தார்.

கெட்டிகா சர்மா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வரும் ‘லைலா சிங்’ என்ற நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’, ‘கலைவானியே’ உள்ளிட்ட பாடல்கள் ஏற்கெனவே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, காதல், கனவு மற்றும் போராட்டங்களை இளமைத் துடிப்புடன் சொல்லும் ‘மீசைய முறுக்கு 2’, செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.