அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மணி ரத்னம் வெளியிட்ட ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

 

பன்முக ஆளுமை மிக்க இயக்குநர் மணிரத்னம் ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது குறித்து ஒட்டு மொத்த படக்குழுவினரும் உளம் குளிர்ந்து மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கின்றனர்.
இது குறித்து பேசும்போது நடிகர் அருண் விஜய், “எனது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பிறந்த நாள் பரிசு இது. திரையுலக ஜாம்பவானான மணி ரத்னம் சார் எனது படத்தின் பர்ஸ் லுக்கை வெளியிட்டதை மிகப் பெரிய ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். அது மட்டுமல்ல, படத்துக்கே இது ஒரு சாதகமான அதர்வைக் கொடுத்து பலம் சேர்த்திருக்கிறது. அவரது இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து மறக்க முடியாத மகத்தான அனுபவமாக எனக்கு அமைந்ததுடன் நடிப்பின் புதிய பரிமாணங்களையும் கற்றுக் கொள்ள உதவியது. கடந்த ஆண்டு பிறந்த நாள் எனக்கு எப்படி அற்புதமாக அமைந்ததோ, அதேபோல் இந்த ஆண்டும் தொட்டால் பொன்னாகும்  அவரது அற்புதக் கரங்களால் ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது மிகச் சிறந்த துவக்கமாக எங்கள் குழுவுக்கு அமைந்திருக்கிறது” என்றார்.

படம் குறித்து மேலும் பகிர்ந்து கொண்ட அருண் விஜய், “நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் ஒரு காவல் துறை அதிகாரியின் கோபம் எவ்வாறு தடைகளைத் தாண்டி நீதிக்காக போராட வைக்கிறது என்பதுதான் இந்தப் படம். இது பல முன்மாதிரிகளைக் கொண்டிருந்தாலும், இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் கதையை  விவரித்த விதமும், இப்போது அதை படமாக்கிய விதமும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது” என்றார்.          

சினம் படப்பிடிப்பு தளத்திலேயே அருண் விஜயின் பிறந்த நாள் வெகு விமரிசையாகவும் உணர்ச்சி பூர்வமாகவும்  கொண்டாடப்பட்டது. அருண் விஜயின் தந்தை விஜயகுமார், தாயார், குழந்தைகள், சகோதரி ப்ரீதா, மற்றும் அக்னி சிறகுகள் இயக்குநர் நவீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தங்கச் சங்கிலி ஒன்றை அருண் விஜய்க்கு பரிசாக வழங்கினார். இயக்குநர் அறிவழகன், ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு அருண் விஜயை வாழ்த்தினர்.

மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற குற்றம் 23 படத்துக்குப் பிறகு அருண் விஜய் மீண்டும் சினம் படத்தில் காக்கி சீருடை அணிந்து கலக்க இருக்கிறார். மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் சினம் படத்தை, தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்குகிறார். பலாக் லால்வாணி கதாநாயகியாகி வேடத்தில் நடிக்க காளி வெங்கட் மிகவும் முக்கியத்துவமுள்ள ஒரு வேடத்தில் நடிக்கிறார்.ஷபீர் இசையமைக்கும் இப்படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குநர் பொறுப்பை ஏற்றிருப்பவர் மைக்கேல். மதன் கார்க்கி, ப்ரியன் ஏக்நாத் பாடல்களை எழுதுகின்றனர். பவன் டிசைனராகப் பணியாற்ற, சண்டைக் காட்சிகளை சில்வா அமைக்கிறார்.