ஜீலை 1 முதல் தீப்பெட்டி ஆலைகள் மூடல், தொடர் போராட்டம் நடத்த உற்பத்தியாளர்கள் முடிவு

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தார், எட்டயபுரம், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்,திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆகிய பகுதியில் தீப்பெட்டி தொழில்கள் நடைபெற்று வருகிறது. கையினால் செய்யப்படும் தீப்பெட்டி, பகுதி நேர இயந்திர தீப்பெட்டி, முழுநேர இயந்திர தீப்பெட்டி என 3 வகையான தீப்பெட்டி தொழில்கள் நடைபெற்று வருகிறது. கையினால் செய்யப்படும் தீப்பெட்டி தொழில் நசிவடைந்த நிலையில் பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழில் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட பகுதி நேர இயந்திர தீப்பெட்டி தொழிற்ச்சாலைகளும், 20க்கும் மேற்பட்ட முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது.

இந்த தீப்பெட்டி தொழிலை நம்பி நேரிடையாகவும் மற்றும் மறைமுகமாவும் 5 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது இவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கியுள்ளது ஜீ.எஸ்.டி.வரி. கையினால் செய்யப்படும் தீப்பெட்டிக்கு 5 சதவீதமும், பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டிக்கு 18 சதவீதம் அறிவித்துள்ளது தீப்பெட்டி உற்பத்தியாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டம் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம் தலைமையில்தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்தியரசு உடனடியாக ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தி வரும் 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என்றும், வரும் 3 தேதி கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்களை கொண்டு பேரணி நடத்துவது என்றும், மத்தியரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தினந்தோறும் மத்திய கலால் துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்றும் வரும் 10ஆம் தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.