‘நிபுணன்’ படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நடிகை ஸ்ருதி ஹரிஹரன், டான்ஸ் மாஸ்டரை ரகசியமாக திருமணம் செய்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. இதனால் அதிர்ந்து போன ஸ்ருதி, அந்த தகவலை அவசர அவசரமாக மறுத்துள்ளார். தமிழ் பெண்ணான ஸ்ருதி ஹரிஹரன், பெங்களூரில் வளர்ந்தவர். அவர் தற்போது கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் வெளிவந்த ‘நிபுணன்’ படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது, துல்கர் சல்மானின் ‘சோலோ’ என்கிற இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஸ்ருதி, தனக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் டான்ஸ் மாஸ்டரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கன்னட திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ரகசிய திருமணம் பற்றிய தகவல் அறிந்து அதிர்ந்துபோன ஸ்ருதி, அந்த செய்தியை அவசர அவசரமாக மறுத்துள்ளார். “நான், டான்ஸ் மாஸ்டரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியுள்ளதை அறிந்து அதிர்ந்து போனேன். டான்ஸ் கற்றுத் தரும் குரு ஸ்தானத்தில் இருப்பவரோடு இணைத்து வதந்தி பரப்பியிருப்பது வருத்தமாகவும், மிகவும் வேதனையாகவும் உள்ளது.எனக்கே தெரியாமல்; எனக்குத் திருமணம் நடத்திவைத்த அந்த புண்ணியவான் யார் என தெரியவில்லை?
நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தாரும் வலியுறுத்தி வருகிறார்கள். எனக்கு திருமணம் நிச்சயமானதும் எல்லோருக்கும் தெரிவிக்கிறேன். நிச்சயமாக திரையுலகை சேர்ந்த யாரையும் திருமணம் செய்ய மாட்டேன்” என்றார் ஸ்ருதி.