மேரி கோம் தேசிய குத்துச்சண்டை பார்வையாளர் பதவியை ராஜினாமா செய்தார்

தேசிய குத்துச்சண்டை போட்டியின் பார்வையாளர் பதவியில் இருந்து ஐந்து முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம்,  விலகியுள்ளார். அண்மையில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம் கூறுகையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங்கிடம் ஆலோசனை நடத்திய பிறகு, நான் இப்பதவியில் இருந்து 10 நாட்களுக்கு முன்னரே விலகிவிட்டேன்” என்றார். 

விளையாட்டுத்துறை செயலாளர் இன்ஜெதி ஸ்ரீனிவாஸ், மேரி கோம் உட்பட 12 பேரை பார்வையாளர்களாக நியமனம் செய்திருந்தார். வீரர்- வீராங்கனைகள் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கும் போது, கூடுதல் பதவியில் இருக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதனை மீறி யாரும் வேறு பதவியில் இருக்கக் கூடாது என விளையாட்டுத் துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் திட்டவட்டமாக அறிவித்தார். அதன் விளைவாகவே, தான் முன்பே வேண்டாம் என்று கூறிய பதவியை ராஜினாமா செய்துள்ளார் மேரி கோம். பதவி ஏற்ற 12 பேரில், மேரி கோம் மற்றும் சுஷில் குமார் மட்டுமே விளையாடி வருகின்றனர்.