இந்தியப் போர்க்கப்பல்களை பார்க்க திரண்ட பல ஆயிரம் மக்கள்

 

திருவிடந்தை ராணுவ கண்காட்சியை ஒட்டி, சென்னை துறைமுகத்தில் சுமித்ரா, ஷயாத்ரி, கமோர்டா, ஐராவத், குக்ரி ஆகிய 5 போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 13ம் தேதி முதல் இந்த கப்பல்களை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடைசி நாள் என்பதால் ஆயிரக்கணக்கானோர் கப்பலை பார்வையிட திரண்டிருந்தனர். காலை முதலே தீவுத்திடலில் அனுமதி பெறுவதற்காக மக்கள் அலைஅலையாகத் திரளத் தொடங்கினர். தீவுத்திடலுக்குள் காத்திருந்தோர் படிப்படியாக சிறப்பு பேருந்துகள் மூலம் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டனர். கூட்டம் அதிகரித்ததால் ஒரு நபர் ஒருகப்பலை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டது.

நேரம் செல்லச் செல்ல தீவுத்திடல் பகுதியில் கூட்டம் அதிகரித்தது. தீவுத்திடலுக்கு வெளியே சுமார் 20 ஆயிரம் பேர் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு திரண்டனர்.500க்கும் மேற்பட்ட போலீஸார் பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக கூட்டம் திரண்டதையடுத்து கடற்படையின் பிராந்திய தளபதி கர்னல் அலோக் பட்நாயக் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அத்தனை பேரையும் பார்வையிட அழைத்துச் செல்வது சாத்தியமில்லை என்பதால் பிற்பகல் 1.45 மணிக்கு தீவுத்திடலுக்குள் பொதுமக்கள் அனுமதி நிறுத்தப்பட்டது. காத்திருந்தோரை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியதையடுத்து, பொதுமக்களில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆர்வத்துடன் குழந்தைகளை அழைத்துவந்து விட்டு திரும்பி செல்வது ஏமாற்றமளிப்பதாக பொதுமக்கள் கூறினர்.

போர்க்கப்பலில் பொதுமக்கள் பார்வையிடுவதை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த கப்பற்படை அதிகாரி அருண்தாஸ் கூறும்போது, “எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக உள்ளது. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும். மக்கள் சேவை செய்வதற்காகவே இந்த பணிக்கு வந்ததால், கஷ்டத்தையும் இஷ்டமாக எடுத்துக்கொண்டோம். உண்மையில் சொல்லப்போனால் உடலளவில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் இந்த அளவு பொதுமக்களின் ஆர்வத்தை பார்ப்பது பூரிப்பாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.

ஐஎன்எஸ் சாயத்ரி, ஐஎன்எஸ் காமோத்ரா, ஐஎன்எஸ் சுமித்ரா, ஐஎன்எஸ் ஐராவத் ஆகிய 4 கப்பல்களை பொதுமக்கள் பார்த்தனர். அதில் இருந்த  ஏவுகணைகள், துப்பாக்கிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். நேற்று 33,492 பேர் பார்த்தனர். கடந்த 3  நாட்களில் மொத்தம் 71,400 பேர் கப்பல்களை பார்வையிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கப்பலைப் பார்க்க ஆர்வத்துடன் வந்த பொதுமக்களால் காமராஜர் சாலையில் ரிசர்வ் வங்கி முதல் நேப்பியர் பாலம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகக் காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து வாகனங்களில் வந்தவர்கள் ஆங்காங்கே நிறுத்திவிட்டு தீவுத் திடலுக்கு நடந்தே வரும் நிலையும் காணப்பட்டது.

இந்திய கடற்படையின் கிழக்குப் பிரிவு விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இங்குதான் பெரும்பாலும் போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மேலும் சில கப்பல்கள் வரிசைப்படி நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும்.