‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்க படத்தொகுப்பு செய்துள்ளார் கணேஷ்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் ஆரி பேசும்போது, “இதுபோன்ற பட விழாக்களில் இருக்கும் கலகலப்பு கூட தற்போது வரும் பல படங்களில் இருப்பதில்லை என்பதே உண்மை. ‘உங்கள போடணும் சார்’ என்கிற படம் எல்லாம் வரும்போது, ‘வீராபுரம் 22௦’ என்கிற மண்ணின் பிரச்சனையை, மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ள இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இங்கே படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது, அதிலும் குறிப்பாக சின்ன படங்களுக்கு மாலைக்காட்சி கிடைப்பது என்றால் மிக கஷ்டமான ஒன்று. பெரிய தயாரிப்பாளர்கள், பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேரும்போது சினிமா நன்றாக இருக்காது.. சிறிய தயாரிப்பாளர்களிடம், உழைப்பவர்களிடம் பணம் சென்று சேரும்போதுதான் இந்த இடத்தில் ஒரு வளர்ச்சி இருக்க முடியும்.
தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை கொண்டு வருவதாக அரசு அறிவித்திருக்கிறது. அப்படி செய்யும்போதுதான் வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.. நடிகர்கள் சம்பளம் பற்றி பல காலமாக பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லா நடிகர்களும் தங்களது சம்பளத்தை வெளிப்படையாக சொல்லி வாங்கிக்கொள்ள நினைக்கவேண்டும்.. நான் அப்படித்தான்.. என்னுடைய தயாரிப்பாளர்கள் என்னுடைய படத்திற்கு என்ன வியாபாரமோ அதற்கான சம்பளத்தை கொடுங்கள் என வெளிப்படையாகவே கூறி விடுகிறேன்..
எனது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், இன்னும் 5 வருடங்களில் இந்த சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கும் முயற்சிகள் வெகுவாக குறைந்துவிடும்.. சினிமா இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டதால் வீட்டிலிருந்தபடியே அமேசான், நெட்பிளிக்ஸ ஆகியவற்றின் மூலம் குறைந்த கட்டணத்தில் வீட்டிலேயே ஒரு தியேட்டர் உருவாகும் சூழல் வந்துவிட்டது. இந்த மாதிரியான வியாபார முறைகளால் சினிமா வளமாகத்தான் இருக்கும்.. ஆனாலும் அதன் பலன்கள் தயாரிப்பாளருக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை.. அதனால் அடுத்து நல்ல கதையை, புதிய கதைக்களங்களை, இன்றைக்குள்ள பிரச்சனைகளை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும்.. வழக்கமான பார்முலாவிலேயே படமெடுத்தால் இனிவரும் நாட்களில் அது ஓடுமா என்பது கேள்விக்குறிதான். இப்போது வெப் சீரிஸ்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. பல இயக்குநர்கள் அதை தேடி செல்கின்றார்கள். அதனால் வரும் நாட்களில் தியேட்டர்கள் இருந்தாலும் தியேட்டர்களை மட்டுமே நம்பி படம் எடுக்கும் சூழல் மாறும்.. இதனை தியேட்டர் அதிபர்களும் உணரவேண்டும்’ என்றார்.
இயக்குனர் பேரரசு பேசும்போது, ‘படத்தின் ஆர்ட் டைரக்டர் டாஸ்மாக் போல தத்ரூபமாக செட் போட்டதாகவும் உண்மையிலேயே அதை டாஸ்மாக் கடை என நினைத்துக்கொண்டு சிலர் தண்ணியடிக்க வந்துவிட்டதாகவும் கூறினார்கள்.. இதற்கு இவ்வளவு செட் எல்லாம் போட தேவையில்லை.. டாஸ்மாக் என்று ஒரு போர்டு வைத்தாலே போதும்.. உடனே உள்ளே வந்து விடுவார்கள்.. அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் மக்கள் க்யூவில் நின்று மதுவை வாங்கி குடிக்கிறார்கள்..
இந்தப்படத்தின் இசையமைப்பாளர்கள் ரித்தேஷ், ஸ்ரீதர் இருவரும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் போல புகழ் பெறுவார்கள்.. இதில் விஸ்வநாதன் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்.. ராமமூர்த்தி பேசமாட்டார் என்று சொல்வார்கள்.. அதேபாணியை நீங்கள் இருவரும் கடைபிடிக்க வேண்டும்.. வீராபுரம் 220 என பின்கோடு சேர்த்து டைட்டில் வைத்துள்ளது பாராட்டுக்குரியது.. இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் வெளியானபோது அதில் இடம்பெற்ற முருங்கைக்காய் மேட்டரால், தியேட்டர்காரர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரும் லாபம் பார்த்தனர்.. ஆனால் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.. எங்களது தோட்டத்தில் விளைந்த முருங்கைக்காய்களை கொண்டு போய் விற்பதற்கு ரொம்ப சிரமப்பட்டோம்..
சந்திராயன்-2 விண்கலம் சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது.. அதில் தற்போது சிறிய பிழை மட்டும் நிகழ்ந்துவிட்டது.. அதற்காக அதை கிண்டல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.. சந்திராயன்-2 நம் இந்தியாவின் கெளரவம்.. பிரதமர் மோடி வெளிநாட்டிற்கு செல்வதை கூட நீங்கள் கிண்டல் செய்து கொள்ளுங்கள்.. சந்திராயன் நிலவுக்கு செல்வதை தயவுசெய்து விமர்சிக்காதீர்கள்” என்றார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “தியேட்டர்களில் ஆன்லைன் கட்டணங்கள் வசூலிப்பதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இதன் பலன் கிடைப்பதில்லை.. அதனால் தான் அரசாங்கமே இந்த ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை தனது கையில் எடுத்திருக்கிறது. இது யாரையும் மிரட்டுவதற்காக இல்லை.. நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஒரு தற்காப்பு முயற்சிதான்.. இதன்மூலம் 500, 1000 என அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்க முடியாது. பெரிய ஹீரோக்கள் தங்களது வியாபாரத்தை பார்த்து தாங்களாகவே நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகும்.
ஹாலிவுட் ஹீரோக்கள் சம்பளம் வாங்குவது போல ஆரம்பத்தில் 10% தொகையை வாங்கிக்கொண்டு பின்னர் படம் வெளியாகி அதன் மூலம் கிடைக்கும் வசூலில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மீதி சம்பளமாக வாங்கிக் கொள்கிறார்கள்.. ஆனால் அதுவே அவர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பளமாக கிடைக்கும்.. இது உண்மையிலேயே நடிகர்களுக்கு ஏற்ற திட்டம்தான்.. அதற்கு நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால்தான் சினிமா நல்லபடியாக இருக்கும்.. என் வீட்டினர் தியேட்டருக்கு போய் க்யூவில் நின்று படம் பார்ப்பதற்கு சங்கடப்பட்டுக்கொண்டு நெட்பிளிக்ஸில் தான் படம் பார்க்கிறார்கள்..
சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் வியாபார புள்ளி விவரங்களை பார்க்கும்போது அதன் டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியவற்றின் மூலம் கிடைத்த தொகையை விட தியேட்டர்கள் வினியோக உரிமை மூலம் கிடைத்த தொகை குறைவு.. இதிலிருந்து பெரிய படங்களுக்கு தியேட்டர்கள் மூலம் வரும் வருமானம் குறைந்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது. எழுத்தாளர் சங்கத்திற்கு தலைவராக பாக்யராஜ் வந்த பிறகுதான் அதன் பவர் என்னவென்று முழுவதுமாக தெரியவந்துள்ளது” என்றார்.
இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்ராஜ் ஏற்கனவே எடுக்கப்பட்ட கால்வாசியில் நின்ற படத்தை தைரியமாக முன்வந்து தனது கையில் எடுத்து முழுப்படத்தையும் முடித்துள்ளார்.. சினிமாவில் முதல் படத்தை எடுக்க வந்துள்ள இவர் சென்டிமெண்ட் பாராமல் இப்படி ஒரு விஷயத்தை செய்ததற்காக அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் மணல் கொள்ளையை மையமாக கொண்டது என்பது தெரிகிறது. அதேசமயம் இந்த படத்தின் தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 200 லாரிகளுக்கு மேல் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை இதெல்லாம் தெரிந்துதான் இந்தக் கதையை அவரிடம் இயக்குனர் செந்தில்குமார் சொன்னாரா..? இல்லை, அட.. இது நம்ம கதைபோல இருக்கிறதே என்று இந்த படத்திற்குள் தயாரிப்பாளர் தானாகவே வந்து விட்டாரா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்..
இந்தப் படத்தில் இரண்டு மெலடி பாடல்கள் எனக்கு பிடித்திருந்தன.. இந்த படத்தின் கதாநாயகி மேக்னாவை திரையில் பார்க்கும்போது பக்கத்து வீட்டு பெண் போல சைட் அடிக்கலாம் போலவே இருந்தது.. ஆர்வி.உதயகுமார் சொன்னதை கெட்டு சிரிப்புத்தான் வருகிறது. அரசாங்கமே ஆன்லைனில் டிக்கெட் முறையை கொண்டு வந்தாலும் அதிலும் பலர் மொத்தமாக டிக்கெட்டுகளை புக்கிங் செய்து பின்னர் அதிக விலைக்கு விற்பார்கள்.. அதிலும் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க முடியாது.. நல்ல படத்தை எடுக்க வேண்டும்.. அது நல்ல வினியோகஸ்தர்களிடமும் திரையரங்குகளிலும் கொடுக்க வேண்டும். இதற்கு முந்தைய விழாவில் பேசியபோது கஞ்சா குடித்தது பற்றி சொல்லப்போக அது வேறு விதமாக பரவிவிட்டது.. இளம் வயதில் தப்பு பண்ணும் சூழ்நிலைகள் எல்லோருக்கும் வரும்.. அதிலேயே இருந்து விடாமல், அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காகவே அதை பற்றி சொன்னேன்” என்று கூறினார்.